
கடந்த 2016 நவம்பர் 8 அன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் திடீரென உரையாற்றினார். பெரிய முன்னறிவிப்பு எதுவுமின்றி காணொளி வாயிலாக நாட்டு மக்கள் முன் தோன்றிய பிரதமர் மோடி, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் நள்ளிரவு முதல் செல்லாது என அறிவித்தார். இந்த அறிவிப்பு அன்றைய நாள் இரவு அனைவரையும் ஆச்சர்யத்திலும் அதிர்ச்சியிலும் மூழ்கடித்தது.
8 ஆண்டுகள் ஆன பிறகும்கூட, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் எதிர்மறையான தாக்கம் இன்னும் இருப்பதாகத் தொழில் துறையினர் கூறுவதும் உண்டு.
அன்றை நாள் இரவு பிரதமர் மோடி என்ன பேசினார்? எதற்காக இந்த அறிவிப்பை வெளியிட்டார்?
நவம்பர் 8, 2016-ல் பிரதமர் மோடி பேசியதன் மறுபார்வை:
"இன்று நான் சில முக்கியமான பிரச்னைகள் மற்றும் முடிவுகள் குறித்து உங்களிடம் பேசவுள்ளேன்.
ஊழல் மற்றும் கறுப்புப் பணத்தின் பிடியை முறியடிக்க, தற்போது நடைமுறையில் புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இன்று நள்ளிரவு முதல் செல்லுபடியாகாது என முடிவு செய்துள்ளோம். அதாவது நவம்பர் 8 2016. இதன் அர்த்தம், இன்று நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைப் பரிமாற்றம் செய்தால் அது ஏற்றுக்கொள்ளப்படாது. தேச விரோதிகள் மற்றும் சமூக விரோதிகள் வசம் உள்ள 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழந்து வெறும் காகிதமாக மாறும்.
நேர்மையாக, கடுமையாக உழைக்கும் மக்களின் நலன்களும் உரிமையும் முழுமையாகக் காக்கப்படும். 100, 50, 20, 10, 5 மற்றும் 1 ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகும். அனைத்து காசுகளும் செல்லுபடியாகும். இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இவற்றுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது.
ஊழல், கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளுக்கு எதிரான வெகுஜன மக்களின் போராட்டக் கரங்களுக்கு இந்த நடவடிக்கை வலு சேர்க்கும். ஊழல், கறுப்புப் பணம், கள்ள நோட்டுகள், பயங்கரவாதம் ஆகியவற்றுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில், நம் நாட்டைத் தூய்மைப்படுத்தும் இந்த இயக்கத்தில், நம் மக்கள் சில நாள்களுக்கு சிரமப்பட மாட்டார்களா? ஒவ்வொரு குடிமகனும் முன்வந்து இதில் பங்கெடுப்பார்கள் என எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து அரசுகள், சமூக சேவை அமைப்புகள், ஊடகங்கள் மற்றும் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இதில் உத்வேகத்துடன் பங்கெடுத்து வெற்றி பெறச் செய்வார்கள் என நம்புகிறேன்.
இந்த நடவடிக்கைக்கு ரகசியம் காப்பது அத்தியாவசியமானது. தற்போது உங்களிடம் பேசுவது மூலம் தான் வங்கிகள், தபால் நிலையங்கள், ரயில்வே, மருத்துவமனைகள் மற்றும் இதர துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி, வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் மிகக் குறுகிய காலத்தில் இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். நிச்சயமாக இதற்கு நேரம் தேவை என்பது தெரியும். எனவே, அனைத்து வங்கிகளும் நவம்பர் 9 அன்று பொதுமக்கள் சேவை ரத்து செய்யப்படுகிறது. இது உங்களுக்கு கஷ்டத்தைக் கொடுக்லாம். இந்தப் பெரும் பணியை வங்கிகளும் தபால் நிலையங்களும் வெற்றிகரமாகச் செய்து முடிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
கால இடைவெளிகளில் ரூபாய் நோட்டுகளின் தேவைக்கேற்ப அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை மத்திய அரசின் ஒப்புதலுடன் ரிசர்வ் வங்கி வெளியிடும். கடந்த 2014-ல் 5,000 மற்றும் 10,000 ரூபாய் நோட்டுகளை வெளியிட ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்திருந்தது. மிகுந்த கவனத்துடன் ஆய்வு செய்த பிறகு, இதை ஏற்றுக்கொள்ளவில்லை.
தற்போது இந்த முயற்சியின் பகுதியாக 2,000 ரூபாய் நோட்டுகளை வெளியிட ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளது. இது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவின் வரலாற்றில் சில தருணங்கள் வரும். அப்போது ஒவ்வொரு நபரும் இந்தத் தருணத்தில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள். நாட்டின் வளர்ச்சிக்காக நம் பங்களிப்பை ஆற்ற வேண்டும் என விரும்புவார்கள். இதுமாதிரியான தருணங்கள் அபூர்வமாகதான் நடக்கும். தற்போது மீண்டும் இதுபோன்ற ஒரு தருணத்துக்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. ஊழல், கறுப்புப் பணம், கள்ள நோட்டுகளுக்கு எதிரான போராட்டத்தில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்பதற்கான ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த இயக்கத்தில் நீங்கள் எந்தளவுக்கு உதவியாக இருக்கிறீர்களோ அந்தளவுக்கு அது வெற்றி காணும்" என்று பிரதமர் மோடி பேசினார்.