சஹல் - தனஸ்ரீ விவாகரத்தா?: வழக்கறிஞர் அறிக்கை

பல தவறான தகவல்கள் பரப்பப்படுவதால், செய்தி வெளியிடும் முன்பு ஊடகங்கள் உண்மையைச் சரிபார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
சஹால் - தனஸ்ரீ (படம் - @dhanashree9)
சஹால் - தனஸ்ரீ (படம் - @dhanashree9)
1 min read

கிரிக்கெட் வீரர் சஹல் - தனஸ்ரீ விவாகரத்து குறித்த செய்திக்கு தனஸ்ரீயின் வழக்கறிஞர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சஹலும் தனஸ்ரீயும் 2020-ல் திருமணம் செய்துகொண்டார்கள். கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய 2020-ம் ஆண்டுத் தொடக்கத்தில் தனஸ்ரீயின் நடன வகுப்புகளில் சஹல் இணைந்தார். இருவரும் உடனடியாகக் காதலிக்க ஆரம்பித்து 2020 டிசம்பரில் திருமணம் செய்துகொண்டார்கள்.

எனினும் சமீபகாலமாக இருவரும் பிரிந்து வாழ்வதாகத் தகவல் வெளியானது. இருவரும் சமூகவலைத்தளங்களில் ஒருவருக்கொருவர் பின்தொடர்வதையும் நிறுத்தினார்கள். தன்னுடைய இன்ஸ்டகிராமில் தனஸ்ரீ உடனான புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கினார் சஹல். எனினும் தனஸ்ரீ இன்ஸ்டகிராமில் இருவருடைய புகைப்படங்களும் காணொளிகளும் இன்னமும் உள்ளன.

இந்நிலையில் இருவரும் விவாகரத்து கோரி மும்பை பந்த்ரா குடும்ப நல நீதிமன்றத்தில் விண்ணப்பித்ததாகவும் நேற்று (பிப். 20) இருவரும் நீதிமன்றத்தில் ஆஜரானதாகவும் ஏபிபி ஊடகம் செய்தி வெளியிட்டது. இருவரும் கருத்து வேறுபாடுகள் காரணமாக இம்முடிவை எடுத்துள்ளதாகவும் கடந்த 18 மாதங்களாகப் பிரிந்து வாழ்வதாகவும் கூறியதையடுத்து, இருவருக்கும் நீதிமன்றம், விவாகரத்து வழங்கியதாகவும் தகவல் வெளியானது. பிறகு, ஜீவனாம்சமாக ரூ. 60 கோடியை தனஸ்ரீ கோரியதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் தனஸ்ரீயின் வழக்கறிஞர் இந்த விவகாரம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

சஹல் - தனஸ்ரீ ஆகிய இருவரும் விவாகரத்து பெற்றதாக வெளியான செய்தி குறித்து நான் கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. இந்த விவகாரம் தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளது. பல தவறான தகவல்கள் பரப்பப்படுவதால், செய்தி வெளியிடும் முன்பு ஊடகங்கள் உண்மையைச் சரிபார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் ஜீவனாம்சமாக ரூ. 60 கோடி கோரியதாக வெளியான தகவலை தனஸ்ரீயின் பெற்றோர் மறுத்துள்ளார்கள். இந்த வதந்தியில் எவ்வித உண்மையும் இல்லை. இந்த ஆதாரமற்ற செய்தியால் நாங்கள் மனவேதனை அடைந்துள்ளோம் என்று அவர்கள் கூறியுள்ளார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in