கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: தில்லியில் கூடிய இண்டியா கூட்டணித் தலைவர்கள்!

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: தில்லியில் கூடிய இண்டியா கூட்டணித் தலைவர்கள்!
ANI

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிராக தில்லி ராம்லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேரணியில் பங்கேற்றார்கள்.

தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது கைது நடவடிக்கையைக் கண்டித்து தில்லி ராம்லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணிக் கட்சிகள் சார்பில் மாபெரும் பேரணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பேரணியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா, சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் அணித் தலைவர் சரத் பவார், ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரென், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரெனின் மனைவி கல்பனா சோரென், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் டெரிக் ஓ பிரையன், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி. ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹபூபா முஃப்தி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.

திமுக சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்ள முடியாததால், அவருக்குப் பதில் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா கலந்துகொண்டு முதல்வரின் உரையை வாசித்தார்.

இந்தப் பேரணியில், இண்டியா கூட்டணி சார்பில் வைக்கப்பட்டுள்ள 5 கோரிக்கைகளை பிரியங்கா காந்தி வாசித்தார்.

இண்டியா கூட்டணி சார்பில் வைக்கப்பட்டுள்ள 5 கோரிக்கைள்:

  • மக்களவைத் தேர்தலில் அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைப்பதைத் தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.

  • அமலாக்கத் துறை, சிபிஐ மற்றும் வருமான வரித் துறை மூலம் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக எடுக்கப்பட்டும் கடுமையான நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும்.

  • ஹேமந்த் சோரென் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

  • பொருளாதார ரீதியாக எதிர்க்கட்சிகளை வலுவிழக்கச் செய்யும் முயற்சிகளை நிறுத்த வேண்டும்.

  • தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பாஜக பெற்ற நன்கொடைகள் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in