
தமிழ்நாடு தொல்லியல் துறையால் சமர்ப்பிக்கப்பட்ட கீழடி அகழாய்வு ஆய்வறிக்கையை திருத்தி அனுப்பும்படி மத்திய அரசு கோரவில்லை என்று மத்திய கலாச்சார அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தகவல் அளித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்திற்கு அருகே உள்ள கீழடியில் இந்திய தொல்லியல் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட இரு அகழாய்வுகள் தொடர்பான ஆய்வறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணா தாக்கல் செய்துள்ளார்.
நிபுணர்களின் ஆய்வை அடுத்து இந்த அறிக்கையில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளும்படி அமர்நாத் ராமகிருஷ்ணாவின் பரிந்துரைத்துள்ளதாக இந்திய தொல்லியல் துறை அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, ஆய்வறிக்கையில் திருத்தம் செய்ய முடியாது என்று அமர்நாத் ராமகிருஷ்ணா தெளிவுபடுத்தினார்.
இந்நிலையில், கீழடி அகழாய்வு தொடர்பாக கேள்விகளை எழுப்பிய மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறனுக்கு, மத்திய கலாச்சார அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.
கேள்வி: கீழடி அகழாய்வு தொடர்பாக தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை, இந்தியத் தொல்லியல் துறை திருத்தி அனுப்பச் சொல்வதற்கான அறிவியல்பூர்வமான காரணங்கள் ஏதும் இருக்கின்றனவா?
பதில்: தமிழ்நாடு தொல்லியல் துறையிடம் கீழடி அகழாய்வு தொடர்பான திருத்தப்பட்ட அறிக்கையை இந்தியத் தொல்லியல் துறை கோரவில்லை.
கேள்வி: 2024 ஜூன் 18-ல் தொடங்கப்பட்ட 10-ம் கட்ட அகழாய்வில் ஏற்கனவே ஆறு மண் குழாய்கள் மற்றும் பல்வேறு நகர்ப்புற குடியிருப்பு கட்டமைப்புகள் இருந்ததற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. 10-ம் கட்ட அகழாய்வில் எஞ்சியிருக்கும் பணிகளை மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறை வழங்கவுள்ள நிதியுதவி பற்றிய விவரங்கள் என்ன?
பதில்: 2018 தொடங்கி தமிழ்நாடு மாநில தொல்லியல் துறை கீழடியில் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது, இதற்கு இந்திய தொல்லியல் துறை அந்த நிதியுதவியும் வழங்கவில்லை.