
தெற்கு பெங்களூருவில் உள்ள ஆர்.வி. சாலையையும் கிழக்கு பெங்களூருவில் உள்ள பொம்மசந்திராவையும் இணைக்கும் நம்ம மெட்ரோவின் ஓட்டுநர் இல்லாத மஞ்சள் வழித்தடத்தின் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆக. 10) தொடங்கி வைத்தார்.
முதலில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கே.எஸ்.ஆர். பெங்களூரு ரயில் நிலையத்தில் மூன்று வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆக. 10) தொடங்கி வைத்தார். இதில் பெங்களூருவில் இருந்து வட கர்நாடகத்தின் பெலகாவிக்கு செல்லும் வந்தே பாரத் ரயிலும் அடக்கம்.
இதன் மூலம் நாட்டில் செயல்படும் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது.
இதைத் தொடர்ந்து பெங்களூருவில் செயல்படும் மெட்ரோ ரயிலின் மூன்றாவது (மஞ்சள்) வழித்தடத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்து ஆர்.வி. சாலையில் இருந்து எலக்ட்ரானிக் சிட்டி வரை அதில் பயணித்தார். மேலும், ரூ. 15,610 கோடி மதிப்பீட்டிலான பெங்களூரு மெட்ரோவின் மூன்றாம் கட்ட திட்டத்திற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
புதிய மஞ்சள் வழித்தடம் நாளை (ஆகஸ்ட் 11) முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வருகிறது. தொடக்கத்தில், காலை 5:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை ஒவ்வொரு 25 நிமிடங்களுக்கும் மூன்று ஓட்டுநர் இல்லாத ரயில்கள் இயக்கப்படும். அதன்பிறகு இந்த மாத இறுதியில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ. 7,160 கோடியில் மதிப்பீட்டில் 19.15 கி.மீ. தூரத்திற்கு கட்டப்பட்டுள்ள இந்த புதிய வழித்தடத்தில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 லட்சம் பயணிகள் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்போசிஸ், பயோகான் மற்றும் டி.சி.எஸ் போன்ற முக்கிய ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள சில்க் போர்டு சந்திப்பு, பி.டி.எம். லேஅவுட், எலக்ட்ரானிக் சிட்டி மற்றும் பொம்மசந்திரா தொழிற்சாலைப் பகுதி ஆகியவற்றின் வழியாக இந்த புதிய வழித்தடம் செல்கிறது.