
தமிழ், ஆங்கிலத்துடன் இணைந்து மூன்றாவதாக எந்த இந்திய மொழியையும் தமிழ்நாட்டில் கற்றுக்கொள்ளலாம் என்றும், இந்தியை திணிக்கவில்லை என்றும் தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு விளக்கமளித்துள்ளர் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே தமிழகத்திற்கான நிதி விடுவிக்கப்படும் என்று அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான். அவரது கருத்துக்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், தில்லி ஹிந்து கல்லூரியில் நடைபெற்ற ஒரு விழாவில் இன்று (பிப்.17) பங்கேற்றார் தர்மேந்திரன் பிரதான்.
அப்போது, தேசிய கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே நிதி விடுவிக்கப்படும் என்று கூறி மத்திய அரசு இந்தி மொழியைத் திணிப்பதாக தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டுவது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் கூறியதாவது,
`அரசியலமைப்புச் சட்டத்தின் ஒருங்கிணைந்த பட்டியலில் கல்வி இருப்பது எனக்குத் தெரியும். மாணவர்களுக்கு சமமான வாய்ப்பை அளிப்பதற்காகவும், அவர்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத்துவதற்காகவும் பொதுவான ஒரு தளம் தேவைப்படுகிறது. அந்த வகையில் தேசிய கல்விக்கொள்கை புதிய தளமாகும்.
மொழியைப் பொறுத்தவரையில், அனைத்து மொழிகளையும் நான் மதிக்கிறேன். தாய் மொழிக்கான முக்கியத்துவத்தை பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தமிழ் பண்பாட்டையும், மொழியையும் முன்னிலைப்படுத்தும் வகையில் காசி தமிழ் சங்கத்தை முன்னெடுத்திருக்கிறோம்.
நமது நாகரீகத்தின் பழமையான மொழிகளில் தமிழும் ஒன்றாகும். தமிழ், ஆங்கிலத்துடன் இணைந்து மூன்றாவதாக ஒரு இந்திய மொழியை தமிழ்நாட்டு மாணவர்கள் கற்றுக்கொள்வதில் என்ன தவறு?. அவர்கள் மீது இந்தியை திணிக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபடவில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் சிலர் தேசிய கல்விக் கொள்கையை முன்வைத்து அரசியல் செய்கிறார்கள்.
அதேநேரம், நிபந்தனைகளை முன்வைத்து தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசுக்கு உரிமை உள்ளது’ என்றார்.