பச்சை சீருடை: முடிவைத் திரும்பப் பெற்றது ஸொமேட்டோ!

வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்பவும், அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்...
பச்சை சீருடை: முடிவைத் திரும்பப் பெற்றது ஸொமேட்டோ!
ANI

பிரபல உணவு விநியோக நிறுவனமான ஸொமேட்டோ, புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள 'சைவ உணவு டெலிவரி' பிரிவு ஊழியர்கள் வழக்கமான பச்சை நிற ஆடைகளுக்குப் பதிலாக சிவப்பு நிறை ஆடைகளையே அணிந்து வருவார்கள் என்று தெரிவித்துள்ளது.

ஸொமேட்டோ, சைவ உணவு விநியோகத்துக்கென்று பிரத்யேகமாகப் பச்சை நிற சீருடை மற்றும் உணவு கொண்டு செல்லும் பெட்டியை அறிமுகப்படுத்தியது. இதற்குப் பலரும் சமூகவலைத்தளங்களில் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இது, உணவுத் தேர்வுகளின் அடிப்படையில் நிறத்தைக் கொண்டு பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சி என்றும் இதனால் வாடிக்கையாளர்களுக்குப் பல தொந்தரவுகள் ஏற்படும் என்றும் சமூகவலைத்தளங்களில் வாடிக்கையாளர்கள் தங்களுடைய கருத்துகளை வெளிப்படுத்தினார்கள். இந்நிலையில் எதிர்ப்புகளுக்கு மதிப்புளிக்கும் விதமாக ஸொமேட்டோ நிறுவனம் முடிவைத் திரும்பப் பெற்றுள்ளது.

வழக்கமாக உணவு விநியோகம் செய்யும் ஊழியர்களும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிரத்யேக சைவ உணவு விநியோக ஊழியர்களும் இனி சிவப்பு நிற ஆடையையே அணிந்திருப்பார்கள் என்று ஸொமேட்டோ நிறுவனத்தின் இணை உரிமையாளர் தீபிந்தர் கோயல் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். எங்கள் சிவப்பு நிற ஆடை உணவு விநியோக ஊழியர்களுக்கும் அசைவ உணவு விநியோக ஊழியர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இதனால் சைவ உணவை ஆர்டர் செய்பவர்களுக்கு எந்தச் சிக்கலும் ஏற்படாது. அவர்களது இடத்தில் உள்ள வீட்டு உரிமையாளர்களுக்கும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் எந்தப் பிரச்னையும் ஏற்படாது. அவர்களைக் குடியிருப்போர் நலச் சங்க ஊழியர்களும் தடுத்து நிறுத்த மாட்டார்கள் என்றார்.

வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்பவும், அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின் இந்த புதிய சைவ உணவு விநியோகப் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஸொமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

சைவ உணவுப் பிரியர்கள் உணவு எப்படித் தயாரிக்கப்படுகிறது என்பதிலும் அவை எப்படிக் கையாளப்படுகிறது என்பதிலும் ஆர்வமாக உள்ளனர். இந்தப் புதிய பிரிவு, சைவ உணவகங்களிலிருந்து மட்டுமே ஆர்டர்களைப் பெற்று வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும். ஒருபோதும் அசைவ உணவுடன் கலக்கப்படாது என்றும் ஸொமேட்டோ மேலும் கூறியுள்ளது.

சைவ உணவு கேட்டு ஆர்டர் செய்பவர்கள்தான் அதிகம் பேர் உள்ளனர். ஒரே டெலிவரியில் அசைவம், சைவம் இரண்டும் இருந்தால், சமயத்தில் ஒன்றின் வாசனை மற்றொன்றுக்கு செல்லும்போது தர்மசங்கடமான நிலைமையை சந்திக்க வேண்டியுள்ளது. எனவேதான் சைவ உணவு விநியோகம் செய்வதற்கு எனப் புதிய பிரிவை ஏற்படுத்தியுள்ளோம். நாங்கள் சமூகப் பொறுப்புடன் செயல்படுவோம். தேவை ஏற்படும்போது பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதிலிருந்து பின்வாங்கமாட்டோம் என்றும் கோயல் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in