அரட்டை செயலியில் தனியுரிமை பாதுகாக்கப்படுகிறதா?: சந்தேகங்களுக்கு ஸ்ரீதர் வேம்பு பதில் | Arattai App |

நாங்கள் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை அணுக மாட்டோம். அதை விற்கவும் மாட்டோம்...
அரட்டை செயலியில் தனியுரிமை பாதுகாக்கப்படுகிறதா?: சந்தேகங்களுக்கு ஸ்ரீதர் வேம்பு பதில் | Arattai App |
2 min read

அரட்டை செயலியில் பயனர்களின் தனியுரிமை பாதுகாக்கப்படுமா என்ற கேள்விக்கு ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதிலளித்துள்ளார்.

இந்திய நிறுவனமான ஸோஹோவின் பல்வேறு தயாரிப்புகள் நாடு முழுவதும் பிரபலமடைந்து வருகின்றன. குறிப்பாக ஸோஹோ ஆபீஸ் சூட் கோப்புகளை அரசு ஊழியர்கள் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சகம் சமீபத்தில் உத்தரவிட்டது. மேலும், மத்திய அமைச்சர்கள் பலரும் ஸோஹோ மெயிலுக்கு மாறுவதாக அறிவித்து வருகின்றனர். நம் நாட்டின் சுயசார்புத் தன்மையை ஊக்குவிக்கும் விதமாக ஸோஹோ முன்னிறுத்தப்பட்டு வரும் வேளையில், அதன் அரட்டை செயலி மூலம் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்ஆப் வழங்கும் அனைத்து சேவைகளையும் ஸோஹோவின் அரட்டை செயலியும் வழங்குகிறது. இதனால் மக்களிடையே சுதேசி சமூக ஊடகமாக அரட்டை செயலி புகழ்பெற்று வருகிறது. இந்நிலையில்தான், அரட்டை செயலியில் தனியுரிமை பாதுகாப்பு குறித்த சந்தேகம் எழுந்துள்ளது.

வாட்ஸ்ஆப் செயலியில் பயனர்களின் தகவல்கள் மறைகுறியாக்கம் (Encryption) என்ற அம்சத்தின் மூலம் பாதுகாக்கப்படுகிறது. அதாவது, அனுப்புநரின் தகவல்கள் யாராலும் படிக்க முடியாத குறியீடுகளாக மாற்றப்பட்டு பகிரப்படும். தகவலைப் பெறுபவருக்கு மட்டும் அது மொழியாக்கம் செய்யப்படும். இது முழுவதும் கணினியால் மட்டுமே செய்யப்படும் தொழில்நுட்பம் ஆகும். வாட்ஸ்ஆப் இந்த அம்சத்தை அழைப்புகள், தகவல் பரிமாற்றம் இரண்டுக்கும் வழங்குகிறது. ஆனால் அரட்டை செயலியில் அழைப்புகளுக்கு மட்டுமே மறைகுறியாக்க வசதி உள்ளதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் இதுகுறித்த விளக்கத்தை தனது எக்ஸ் தள பதிவில் அளித்துள்ள ஸ்ரீதர் வேம்பு, ”அரட்டை செயலியில் ரகசியக் காதலர்கள் எந்தக் கவலையும் இன்றி தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாம். உங்களது தனிப்பட்ட தகவல்கள் விளம்பரங்களுக்காக வலை வீசும் அமைப்புகளிடம் கசிந்து விடாது என்பதை எங்கள் வலுவான நிலைப்பாடு உறுதி அளிக்கிறது. ஆனால், ரகசியக் கலகக்காரர்கள் விவகாரத்தில் நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டே நமது செயல்பாடு இருக்கும். அரசுக்கு எதிராக ரகசிய கலகக்காரர்களைப் பாதுகாப்பதாக உறுதி அளிக்கும் எந்த நிறுவனமும் தவறான வாக்குறுதி அளிக்கிறது. நம் நாட்டின் இறையாண்மை என்பது நிறுவனங்களை விட உயர்வானது. கூகிள் அல்லது ஆப்பிள் இந்தியாவில் செயல்படும்போது, ​​அவர்கள் இந்திய சட்டத்திற்கு இணங்க வேண்டும், அதேபோல் ஸோஹோ அமெரிக்காவில் செயல்படும்போது அமெரிக்க சட்டத்திற்கு இணங்கி நடக்கும். எனவே ரகசியக் காதலர்கள் போல ரகசியக் கலகக்காரர்களும் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம். ஆனால், அரசுக்கு எதிராக சதி செய்யும் உரிமையை நீதிமன்றங்கள் உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்க முடியாது” என்று பதிவிட்டிருந்தார்.

இக்கருத்து சர்ச்சையை எழுப்பிய நிலையில், “ரகசியக் காதலர்களை விடுங்கள். தம்பதிகள் தங்கள் அந்தரங்கப் புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்ள முடியுமா? அந்தப் படங்களைப் பார்க்க ஸோஹோவில் யாருக்கெல்லாம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்று பயனர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஸ்ரீதர் வேம்பு, “நான் இதைத் தெளிவாக விளக்கிவிட்டேன். எங்கள் தொழில் முழுமையான நம்பிக்கையின் அடிப்படையில் நடக்கிறது. நாங்கள் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை அணுக மாட்டோம். அதை விற்கவும் மாட்டோம். அனுப்புநர் பெறுநருக்கு இடையிலான மறைகுறியாக்கம் என்பது ஒரு தொழில்நுட்ப அம்சமாகும். அது விரைவில் அறிமுகப்படுத்தப்படும். நம்பிக்கை என்பது மிகவும் விலைமதிப்பற்றது. உலகச் சந்தையில் அந்த நம்பிக்கையை நாங்கள் ஒவ்வொரு நாளும் பெற்று வருகிறோம். அந்த நம்பிக்கையை எங்களது ஒவ்வொரு தயாரிப்பின் மூலம் பயனர்களுக்கு அனைத்து இடங்களிலும் நாங்கள் தொடர்ந்து வழங்குவோம்” என்று கூறியுள்ளார்.

மற்றொரு பயனரின் கேள்விக்கு, “இப்போதைக்கு அரட்டை செயலியின் தகவல்கள் மறைகுறியாக்கப்பட்ட கிளவுடு சேமிப்பு போன்ற ஒரு அமைப்பில் சேமிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் யாராலும் அதை அணுக முடியாது. மறைகுறியாக்க அம்சம் செயலியில் கொண்டு வரப்பட்டவுடன் இந்த சேமிப்பு அமைப்பு நீக்கப்படும்” என்றும் விளக்கமளித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in