யூடியூபர் மணீஷ் காஷ்யப் பாஜகவில் இணைந்தார்
படம்: ANI

யூடியூபர் மணீஷ் காஷ்யப் பாஜகவில் இணைந்தார்

பிஹாரிலிருந்து வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்குதலுக்குள்ளாவதாகவும், அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் போலி விடியோவை வெளியிட்டதாக இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.

யூடியூபர் மணீஷ் காஷ்யப் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இன்று பாஜகவில் இணைந்தார்.

பாஜகவில் இணைந்த பிறகு அவர் கூறியதாவது:

"பிஹாரிலிருந்து மனோஜ் திவாரியுடன் (பாஜக எம்.பி.) நேற்று வந்தோம். இவர்களால்தான் என்னால் சிறையிலிருந்து வெளியே வர முடிந்தது. எனது இருண்ட நாள்கள் முடிவுக்கு வந்தன. எனவே, பாஜகவில் இணைந்துள்ளேன். பிஹாரை வலுப்படுத்த வேண்டும். லாலு பிரசாத் யாதவின் குடும்பம் பிஹாரைக் கொள்ளையடித்து அழித்துள்ளது.

சனாதன தர்மத்தை இழிவு செய்பவர்கள் மற்றும் தேசியவாதத்துக்கு எதிரானவர்களுக்கு எதிரான எனது போராட்டம் தொடரும்" என்றார்.

கட்சியில் இணைந்த பிறகு, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவை அவர் நேரில் சந்தித்தார்.

முன்னதாக, பிஹாரிலிருந்து வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்குதலுக்குள்ளாவதாகவும், தமிழ்நாட்டில் அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் போலி விடியோவை வெளியிட்டதாக யூடியூபர் மணீஷ் காஷ்யப் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இவர் கைது செய்யப்பட்டார்.

இதை எதிர்த்து மணீஷ் காஷ்யப் சகோதரர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான உரிய நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்று கூறி, இவர் மீது போடப்பட்ட தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

logo
Kizhakku News
kizhakkunews.in