செருப்பு தைக்கவே லாயக்கு: சாதிரீதியாக பயிற்சி விமானியை துன்புறுத்திய மூத்த அதிகாரிகள்

தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த தனது அடையாளத்தை இழிவுபடுத்தும் நோக்கில் இந்த அவமானகரமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
செருப்பு தைக்கவே லாயக்கு: சாதிரீதியாக பயிற்சி விமானியை துன்புறுத்திய மூத்த அதிகாரிகள்
ANI
1 min read

விமானம் ஓட்டவே தகுதியற்றவன், காலணிகள் தைக்கவே லாயக்கு என்று கூறி, மூத்த அதிகாரிகள் தன்னை அவமதித்ததாக இண்டிகோ விமான நிறுவனத்தைச் சேர்ந்த பயிற்சி விமானி ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தலித் பிரிவைச் சேர்ந்த 35 வயதான பயிற்சி விமானி ஒருவர், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து, இண்டிகோ அதிகாரிகளான தபஸ் டே, மணீஷ் சாஹ்னி, கேப்டன் ராகுல் பாட்டீல் ஆகியோர் மீது எஸ்.சி. எஸ்.டி. (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக புகார்தாரர் முதலில் பெங்களூருவில் உள்ள காவல்நிலையத்தை அணுகியுள்ளார். அங்குள்ள காவலர்கள் பூஜ்ஜிய முதல் தகவல் அறிக்கை (Zero FIR) பதிவு செய்தனர் – இதன் மூலம் குற்றம் எங்கு நடந்தாலும் எந்த காவல் நிலையத்திலும் அதை பதிவு செய்ய முடியும்.

அதன்பிறகு அந்த முதல் தகவல் அறிக்கை இண்டிகோ தலைமையகம் அமைந்துள்ள குருகிராமிற்கு (ஹரியாணா) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 28 அன்று இண்டிகோவின் குருகிராம் அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு ஆலோசனை கூட்டம் குறித்து தனது புகாரில் அந்த பயிற்சி விமானி குறிப்பிட்டுள்ளார்.

30 நிமிடம் நீடித்த அந்த கூட்டத்தின்போது, ​​`நீங்கள் விமானம் ஓட்டத் தகுதியற்றவர், திரும்பிச் சென்று செருப்பு தைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் இங்கே காவலாளியாக இருக்கக்கூட தகுதியற்றவர்’ என்று தன்னிடம் கூறப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தன்னை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தும் நோக்கத்திலேயே வார்த்தைகளால் துன்புறுத்தியதாக அந்த பயிற்சி விமானி புகாரில் குறிப்பிட்டுள்ளார். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த தனது அடையாளத்தை இழிவுபடுத்தும் நோக்கில் இந்த அவமானகரமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தை உயரதிகாரிகள் மற்றும் இண்டிகோ நெறிமுறைகள் குழுவிடம் முதலில் எழுப்பியதாகவும், ஆனால் இது தொடர்பாக எந்தவொரு மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றதால், இறுதியில் காவல்நிலையத்தில் புகார் அளிக்க வேண்டிய கட்டாயம் தனக்கு ஏற்பட்டதாகவும் பயிற்சி விமானி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in