
பிஹார் சட்டப்பேரவையில் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஷ்வி யாதவை 'நீ ஒரு குழந்தை' என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் விமர்சித்துள்ளார்.
பிஹாரில் வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்புத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, தேஜஷ்வி யாதவ் சட்டப்பேரவையில் பேசும்போதுதான், நிதிஷ் குமார் விமர்சனத்தை வைத்துள்ளார்.
தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்புத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஷ்ட்ரீய ஜனதா தள உறுப்பினர்கள் பிஹார் சட்டப்பேரவைக்கு கருப்புச் சட்டை அணிந்து வந்திருந்தார்கள். கடந்தாண்டு மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்தவுடன் இப்பணியை மேற்கொள்ளாதது ஏன் என அவர் கேள்வியெழுப்பினார்.
"நாங்கள் வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் தீவிர சிறப்புத் திருத்தத்தை எதிர்க்கவில்லை. இந்த நடைமுறை வெளிப்படைத்தன்மையுடன் இல்லை. வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள் வாக்காளர்களாக மாறிவிட்டதாக மக்கள் புகாரளித்தார்கள் என்கிறது தேர்தல் ஆணையம்.
இப்பணி கடைசியாக 2003-ல் மேற்கொள்ளப்பட்டது. இது நிறைவடைய ஓராண்டு ஆனது. 2003 முதல் 2025 வரை பல்வேறு தேர்தல்கள் நடந்துள்ளன. அப்படியென்றால், நிதிஷ் குமார் போலி முதல்வர் என்று நாம் சொல்லலாமா? சட்டப்பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள நாம் அனைவரும் போலி வாக்காளர்களின் ஆதரவுடன் தான் தேர்வு செய்யப்பட்டுள்ளோமா?" என்றார் தேஜஷ்வி யாதவ்.
இவரைக் குறுக்கிட்டுப் பேசிய நிதிஷ் குமார், "நீ (தேஜஷ்வி யாதவ்) சிறியவனாக இருந்தபோது, உன் தந்தை ஏழு ஆண்டுகளுக்கு முதல்வராக இருந்தார். உன் தாய் ஏழு ஆண்டுகளுக்கு முதல்வராக இருந்தார். அப்போதைய நிலை என்ன? உன்னுடன் இணைந்து சில காலம் பயணித்தேன். ஆனால், நீ சரியான காரியத்தைச் செய்யவில்லை. எனவே, உன்னிடமிருந்து விலகினேன். நாங்கள் (ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக) ஆரம்பத்திலிருந்து ஒன்றாக இருக்கிறோம். நாங்கள் அப்படியே தொடர்வோம்.
பெண்களுக்காக நீ என்ன செய்தாய்? இஸ்லாமியர்களுக்காக என்ன செய்தாய்? நாங்கள் அனைத்துத் தரப்பினருக்காகவும் பணியாற்றியுள்ளோம். உனக்கு அதெல்லாம் தெரியுமா? நீ ஒரு குழந்தை" என்றார் நிதிஷ் குமார்.
Nitish Kumar | Tejashvi Yadav | Bihar | Bihar Assembly | Bihar Special Intensive Revision | Election Commission