
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாஜகவின் செய்தித்தொடர்பாளரைப் போல செயல்படுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளார்கள்.
தேர்தல் ஆணையம் மீது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்கள். இதுதொடர்பாக தில்லியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், ராகுல் காந்தி 7 நாள்களுக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையெனில் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று அர்த்தமாகிவிடும் என்றார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இண்டியா கூட்டணிக் கட்சிகள் சார்பில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி, திமுக, ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்பட 8 முக்கியக் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள்.
காங்கிரஸ் தலைவர் கௌரவ் கோகோய் கூறியதாவது:
"அரசியலமைப்புச் சட்டத்தால் சாதாரண குடிமக்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள மிக முக்கியமான உரிமை வாக்குரிமை. ஜனநாயகம் இதைச் சார்ந்துள்ளது. தேர்தல் ஆணையம் இதைப் பாதுகாக்க வேண்டும்.
ஆனால், அரசியல் கட்சிகளால் எழுப்பப்பட்ட முக்கியக் கேள்விகளுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் பதிலளிக்கவில்லை. தன்னுடைய பொறுப்புகளிலிருந்து விலகிச் செல்கிறார்.
எதிர்க்கட்சிகளால் எழுப்பப்பட்ட சரியான கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் அரசியல் கட்சிகள் குறித்து கேள்விகளை எழுப்பி தாக்கியுள்ளார்.
பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாத காலமே உள்ள நிலையில்,
இவ்வளவு அவசரமாக வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிர திருத்தத்தை ஏன் மேற்கொள்ள வேண்டும்?
அரசியல் கட்சிகளிடம் ஆலோசனை நடத்தாதது ஏன்?
இவ்வளவு அவசரமாக சிறப்புத் தீவிர திருத்தத்தை அறிவிப்பதற்கான தேவை என்ன?
ஆகியவற்றுக்குப் பதிலளித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
தேர்தல்கள் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்தப்படுவதை உறுதி செய்வது தேர்தல் ஆணையத்தின் அரசியலமைப்பு கடமை.
பக்க சார்பு எடுக்கும் சில அதிகாரிகளின் கரங்களில் தேர்தல் ஆணையம் இருப்பது தெளிவாகிறது. இந்த அதிகாரிகள் தான் விசாரணைக்கு எதிராக உள்ளார்கள்" என்றார்.
சமாஜவாதி தலைவர் ராம்கோபால் யாதவ் கூறியதாவது:
"2022 உத்தரப் பிரதேச தேர்தலில் வாக்காளர் பட்டியலிலிருந்து சமாஜவாதி ஆதரவாளர்கள் பெயர் நீக்கப்பட்டிருப்பதாக அகிலேஷ் யாதவ் பெயர்களைப் பட்டியலிட்டார். நாங்கள் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தோம். ஆனால், தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை" என்றார்.
திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மஹுவா மொய்த்ரா கூறியதாவது:
"மோசடியான வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் தான் மக்களவைத் தேர்தல் நடைபெற்றதா? இது உண்மையெனில் தற்போதைய மற்றும் முந்தைய தேர்தல் ஆணையர்கள் விசாரிக்கப்பட வேண்டும். மக்களவை உடனடியாகக் கலைக்கப்பட வேண்டும்" என்றார்.
ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் மனோஜ் ஜா கூறியதாவது:
"நேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் வருவார் என நினைத்தோம். ஆனால், பாஜகவின் புதிய செய்தித் தொடர்பாளரைக் கண்டறிந்தோம்" என்றார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் பாஜகவின் செய்தித் தொடர்பாளரைப்போல செயல்படுவதாக உத்தவ் தாக்கரே தரப்பு சிவசனையின் அரவிந்த் சாவந்த் குற்றம்சாட்டினார்.
Chief Election Commissioner | Chief Election Commissioner Gyanesh Kumar | INDIA Bloc | Election Commission | RJD | Congress | TMC | BJP spokesperson