
`வங்கதேச ஹிந்துக்கள் மற்றும் கிருஸ்துவர்களுடன் நிற்கிறோம்’ என்ற வாசகம் கொண்ட பையை நேற்று நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவந்த பிரியங்கா காந்தி, இன்று (டிச.12) `பாலஸ்தீனம்’ என்ற வார்த்தையைக் கொண்ட பையை கொண்டுவந்தது பேசுபொருளாகியுள்ளது.
கடந்த நவம்பரில் நடைபெற்ற வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் பிரியங்கா காந்தி. இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அவர் பங்கேற்றார்.
கடந்த வாரம் (டிச.10) நாடாளுமன்றத்திற்கு வெளியே மத்திய அரசைக் கண்டித்து நடைபெற்ற எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி, தொழிலதிபர் கௌதம் அதானி ஆகியோர் இருக்கும் படத்தைக் கொண்ட பைகளைக் கைகளில் ஏந்தியிருந்தனர்.
இந்நிலையில், `வங்கதேசத்தின் ஹிந்துக்கள் மற்றும் கிருஸ்துவர்களுடன் நிற்கிறோம்’ என்ற வாசகத்தைக் கொண்ட பையுடன் நேற்று நாடாளுமன்றத்துக்கு வந்தார் பிரியங்கா காந்தி. அதைத் தொடர்ந்து இன்று `பாலஸ்தீன்’ என்ற வார்த்தையுடன் கூடிய பையுடன் அவர் நாடாளுமன்றத்திற்கு வந்தார்.
மக்களவையில் நேற்று (டிச.16) நேரமில்லா நேரத்திலன்போது உரையாற்றிய பிரியங்கா காந்தி, `வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையின மக்களான ஹிந்துக்கள் மற்றும் கிருஸ்துவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் குறித்து, வங்கதேச அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். வலியில் உள்ளவர்களுக்கான ஆதரவை அரசு வழங்க வேண்டும்’ என்றார்.
கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வங்கதேசத்தில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தை அடுத்து நாட்டைவிட்டு வெளியேறினார் பிரதமர் ஷேக் ஹசீனா. இதனை அடுத்து அந்நாட்டில் இடைக்கால அரசு அமைந்த பிறகு, தொடர்ச்சியாக அங்குள்ள இந்துக்கள் மற்றும் கிருஸ்துவர்கள் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டு வருகிறது.