
2021 பணவீக்கத்தின் அடிப்படையில், வறுமைக்கோட்டின் அளவீட்டை (ஒரு நாளுக்கு) 2.15 டாலர்களில் இருந்து, 3 டாலர்களுக்கு உலக வங்கி உயர்த்திய நிலையில், கடந்த 2011-2012-ல் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 27.1% ஆக இருந்த தீவிர வறுமைக்கோடு விகிதம், 2022-2023-ல் 5.3% ஆக குறைந்துள்ளது.
மிகவும் குறிப்பாக, தீவிரமான வறுமையில் வாழும் மக்களின் எண்ணிக்கை 344.47 மில்லியனில் இருந்து 75.24 மில்லியன் ஆக குறைந்துள்ளது.
மேலும், குறைந்த மற்றும் நடுத்தர வருமானப் பிரிவுக்கான (low middle income category) வறுமைக்கோடு முன்னதாக 3.65 டாலர்களாக இருந்த நிலையில், தற்போது 4.2 டாலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் கடந்த 2011-2012-ல் 57.7% ஆக இருந்த, குறைந்த மற்றும் நடுத்தர வருமானப் பிரிவினர், தற்போது 2022-2023-ல் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 23.9% ஆக குறைந்துள்ளனர்.
முன்னதாக, 2013-2014-ல் 29.17% ஆக இருந்த, பல்வேறு பரிமாணங்களாக (multi dimensional) வறுமையில் வாழும் இந்திய மக்களின் விகிதம், 2022-23 ஆம் ஆண்டில் 11.28% ஆக குறைந்துள்ளதாக நிதி ஆயோக் அறிக்கை வெளியிட்டது. நிதி ஆயோக்கின் இந்த தரவு ஓரளவுக்கு உலக வங்கியின் மதிப்பீட்டை ஒத்து இருந்தது.
உலக வங்கியின் பல்வேறு பரிமாண வறுமை குறியீட்டின்படி, ஒட்டுமொத்த இந்திய மக்கள்தொகையில் கடந்த 2005-2006-ல் 53.8% ஆக இருந்த பணமற்ற வறுமை விகிதம் (non monetary poverty), 2022-2023-ல் 15.5% ஆக சரிந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடைசியாக கடந்த 2011-ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு இந்தியாவில் நடைபெற்றது. அதன்பிறகு நடைபெறவிருந்த கணக்கெடுப்பு 2020, 2021 கோவிட் பெருந்தொற்று அலைகளால் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் உலக மேம்பாட்டு குறிகாட்டிகள் தரவுகள் மற்றும் வீட்டு நுகர்வோருக்கான செலவு கணக்கெடுப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மக்கள் தொகை கடந்த 2023-ல் 143.8 கோடி என்று உலக வங்கி மதிப்பிட்டது. இதன் அடிப்படையிலேயே தற்போது தரவுகள் வெளியாகியுள்ளன.