ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே சிவில் சட்டம் நோக்கி இந்தியா நகர்ந்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சர்தார் வல்லபாய் படேலின் 149-வது பிறந்தநாளை முன்னிட்டு குஜராத் மாநிலம் கெவாடியாவில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஒற்றுமை நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதன்பகுதியாக சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்போது பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:
"ஒரே நாடு ஒரே தேர்தல் நோக்கி செயல்பட்டு வருகிறோம். இது இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்தும். இதனமூலம், வளர்ந்த இந்தியா எனும் கனவை அடைய இந்தியா புதிய உத்வேகத்தைப் பெறும்.
ஒரே நாடு ஒரு சிவில் சட்டம் நோக்கியும் இந்தியா இன்று நகர்ந்து வருகிறது. இது மதச்சார்பற்ற சிவில் சட்டம்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா ஒற்றுமை மற்றும் தேச ஒருமைப்பாட்டில் முன்னெப்போதும் இல்லாத சாதனைகளைப் புரிந்துள்ளது. உண்மையான இந்தியர்களாக, தேசிய ஒற்றுமைக்கான ஒவ்வொரு முயற்சியையும் நாம் உத்வேகத்துடன் கொண்டாட வேண்டும்.
இந்திய மொழிகளை ஊக்குவிப்பதன் மூலம், ஒற்றுமையின் பிணைப்பை வலுப்படுத்தலாம். புதிய கல்விக் கொள்கை இதற்குச் சிறந்த உதாரணம். ஒட்டுமொத்த நாடு இதைப் பெருமையுடன் தழுவிக்கொண்டுள்ளது.
இன்று ஒட்டுமொத்த நாடும் மகிழ்ச்சியாக உள்ளது. சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆன பிறகு ஒரே நாடு ஒரே அரசியலமைப்புச் சட்டம் என்பதை இந்தியா அடைந்துள்ளது. முதன்முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் பாகுபாடு இல்லாமல் வாக்களிப்பு நடந்துள்ளது. முதன்முறையார ஜம்மு-காஷ்மீர முதல்வர் அரசியலமைப்புச் சட்டத்தின்படி பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்" என்றார் பிரதமர் மோடி.