1971-ல் இருந்து உழைக்கும் மக்கள் தொகையின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும், விரைவில் நடைபெறவிருக்கும் மக்கள்தொகை கணக்கீட்டின் படி இந்திய மக்கள்தொகையில் உழைக்கும் மக்களின் விகிதம் 64.4 சதவீதமாக இருக்கும் எனவும் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது எஸ்பிஐ.
உழைக்கும் மக்கள் தொகையைக் கணக்கிட, வயது வரம்பு 15-ல் இருந்து 59 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி மொத்த இந்திய மக்கள் தொகையில், உழைக்கும் மக்களின் விகிதம் 1991-ல் 55.4 சதவீதமாக இருந்தது. இது 2001-ல் 56.9 ஆகவும், 2021 60.7 ஆகவும் உயர்ந்துள்ளது.
தற்போது நடக்கவிருக்கும் இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின் முடிவில் இந்திய மக்கள் தொகையில், உழைக்கும் மக்கள் விகிதம் 64.4 சதவீதமாக உயரும் எனவும், 2031-ல் மேலும் 65.2 சதவீதமாக இருக்கும் எனவும் இன்று (செப்.24) ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது எஸ்பிஐ.
மேலும் மக்கள்தொகை வளர்ச்சியில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களின் பங்களிப்பு குறைந்து வருவதாகவும், உத்தர பிரதேசம், பீஹார் உள்ளிட்ட வட மாநிலங்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதாகவும் எஸ்பிஐ அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உழைக்கும் மக்கள் தொகையின் விகிதம் இவ்வாறு உயர்ந்துவரும் அதே நேரத்தில், 60 வயதுக்கும் மேல் இருக்கும் இந்திய மக்களின் விகிதமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 2011-ல் இந்திய மக்கள்தொகையில் 10.2 சதவீதமாக இருந்த 60 வயதைக் கடந்தவர்களின் விகிதம், 2024-ல் 15 சதவீதத்தை எட்டும் என எஸ்பிஐ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.