
ஜம்மு-காஷ்மீர் பஹல்காமில் பெண் சுற்றுலாப் பயணிகள் பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டிருந்தால், நிச்சயம் உயிரிழப்புகளைக் குறைத்திருக்கலாம் என பாஜக எம்.பி. ராம் சந்தர் ஜாங்க்ரா கூறியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 அன்று 26 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இவர்களில் 25 பேர் சுற்றுலாப் பயணிகள், ஒருவர் உள்ளூர்வாசி. இதுதொடர்பாக பாஜக எம்.பி. பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
ஹரியாணாவில் பிவானியில் நடைபெற்ற அஹில்யாபாய் ஹோல்கரின் 300-வது பிறந்தநாள் விழாவில் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ராம் சந்தர் ஜாங்க்ரா பங்கேற்றார்.
தேவி அஹில்யாபாய் ஹோல்கர் ஜெயந்தி நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
"பஹல்காமில் பெண் சுற்றுலாப் பயணிகள் சண்டையிட்டிருக்க வேண்டும். அவர்கள் சண்டையிட்டிருந்தால், உயிரிழப்புகள் குறைந்திருக்கும். சுற்றுலாப் பயணிகள் அனைவரும் அக்னிவீரில் பங்கெடுத்திருந்தால், பயங்கரவாதிகளை அவர்கள் எதிர்கொண்டிருப்பார்கள். இது உயிரிழப்பு எண்ணிக்கையைக் குறைத்திருக்கும். ராணி அஹில்யாபாயிடம் இருந்த துணிச்சலை நம் மக்களிடம் மீண்டும் தூண்ட வேண்டும்" என்றார் பாஜக எம்.பி. ராம் சந்தர் ஜாங்க்ரா.
ராம் சந்தர் ஜாங்க்ராவின் பேச்சு சர்ச்சையாகியுள்ளது. ஏற்கெனவே, மத்தியப் பிரதேச அமைச்சர் விஜய் ஷா பஹல்காம் தாக்குதல் குறித்து பேசுகையில், கர்னல் சோஃபியா குரேஷி குறித்து கூறிய கருத்துகள் பெரும் விவாதமாக வெடித்தது. உயர் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை விஜய் ஷா கடுமையாகக் கண்டிக்கப்பட்டார்.
தற்போது பாஜக எம்.பி. ராம் சந்தர் பேசியிருப்பது கவனம் பெற்றுள்ள நிலையில், இவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.