இடித்துவிட்டு நிற்காமல் சென்ற சொகுசு கார்; பெண் உயிரிழப்பு: மும்பையில் நடந்தது என்ன?

விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றதாகக் கூறப்படும் அரசியல் தலைவரின் மகன், தற்போது தலைமறைவாக உள்ளார்.
இடித்துவிட்டு நிற்காமல் சென்ற சொகுசு கார்; பெண் உயிரிழப்பு: மும்பையில் நடந்தது என்ன?

மும்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சொகுசு கார் ஏற்படுத்திய விபத்தில் இரு சக்கர வாகனத்தில் கணவருடன் சென்று கொண்டிருந்த பெண் உயிரிழந்தார்.

விபத்து நடந்தது எப்படி?

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கார் ஓட்டுநர் கொஞ்சம் மனிதாபிமானத்தைக் காட்டி, காரை நிறுத்தியிருந்தால், என் மனைவி இன்று உயிருடன் இருந்திருப்பார். எங்களுடைய ஸ்கூட்டருக்கு பின்புறத்தில் கார் வந்து இடித்தது. நான் காரின் முன்பகுதி மீது விழுந்தேன், என் மனைவி என் மீது விழுந்தார். ஆரம்பத்தில் உயிருக்கு ஆபத்தை ஏற்படக்கூடிய அளவுக்குக் காயம் ஏற்படவில்லை. நாங்கள் காரை நிறுத்தச் சொல்லி கத்தினோம். ஆனால், என் மனைவியை காரின் முன்பகுதி மீது வைத்துக்கொண்டு, வேகமாக இயக்கிச் சென்றார். சிஜே ஹவுஸ் முதல் சீ லிங்க் வரை இப்படியே சென்றுள்ளார். காரை ஓட்டிச் சென்றவரை நான் பார்த்தேன். தாடியுடன், அடர்த்தியான முடிகொண்ட இளைஞர் அவர்" என்றார்.

விபத்தை ஏற்படுத்தியது யார்?

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சியைச் சேர்ந்தவர் ராஜேஷ் ஷா. இவருடைய மகன் மிஹிர் ஷா.

விபத்து குறித்து விசாரணை மேற்கொண்ட மும்பை காவல் துறை கூறுகையில், "விபத்து நடைபெற்ற நேரத்திலிருந்து சில மணி நேரத்துக்கு முன்பு வரை ஜூஹுவில் உள்ள மதுபான விடுதியொன்றில் மிஹிர் ஷா நண்பர்களுடன் இருந்திருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணியளவில் அங்கு ரூ. 18,730 பணம் செலவழித்துள்ளார். எனவே, அவர் அங்கு மது அருந்தியிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது" என்றார்.

விபத்து நடந்தபோது மிஹிர் ஷா காரை ஓட்டிச் சென்றுள்ளார். இவரது கார் ஓட்டுநர் உடன் பயணித்ததாகத் தெரிகிறது. மிஹிர் ஷா தலைமறைவாக உள்ளார். மகன் தப்பிக்க உதவியதாகவும், ஆதாரங்களை அழித்த குற்றத்துக்காகவும் இவரது தந்தை ராஜேஷ் ஷாவை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், மும்பையிலுள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ராஜேஷ் ஷாவுக்கு இன்று பிணை வழங்கியுள்ளது. ஓட்டுரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள மிஹிர் ஷாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in