மஹாராஷ்டிர முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் சவான் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மஹாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோலிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார் அசோக் சவான்.
ராஜினாமா செய்தது குறித்து அவர் கூறியதாவது:
"எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளேன். சட்டப் பேரவைத் தலைவரிடம் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளேன். காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளையும் ராஜினாமா செய்துள்ளேன். எந்தக் கட்சியில் இணைவது குறித்தும் நான் இதுவரை முடிவெடுக்கவில்லை. கட்சியில் இணைவது குறித்த எனது தெளிவான நிலைப்பாட்டை இரு நாள்களுக்குப் பிறகு தெரிவிக்கிறேன்.
எதிர்காலத் திட்டங்கள் குறித்து எந்தவொரு கட்சியுடனும் நான் தொடர்பில் இல்லை. உள்கட்சி விவகாரங்களை நான் பொதுவெளியில் பேசுவதில்லை. எனது முடிவு குறித்து எந்தவொரு காங்கிரஸ் எம்எல்ஏ-விடமும் நான் பேசவில்லை. அவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் எதுவும் எனக்குக் கிடையாது."
1987 முதல் 1989 வரை மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார். 2014-ல் மீண்டும் மக்களவைக்குத் தேர்வானார். 1986 முதல் 1995 வரை மஹாராஷ்டிர இளைஞர் காங்கிரஸின் துணைத் தலைவர் மற்றும் பொதுச்செயலாளராக இருந்துள்ளார். 1999 முதல் 2014 வரை எம்எல்ஏ-வாக இருந்துள்ளார்.
டிசம்பர் 8, 2008 முதல் நவம்பர் 9, 2010 வரை மஹாராஷ்டிர முதல்வராக இருந்துள்ளார் அசோக் சவான்.