"மூத்த சகோதரியாக வந்துள்ளேன்": பயிற்சி மருத்துவர்களின் போராட்டக் களத்தில் மமதா பானர்ஜி

"உங்கள் மீது நான் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன். மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரப் பிரதேசம் அல்ல."
கோப்புப்படம்
கோப்புப்படம்
2 min read

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடத்துக்குச் சென்ற மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, முதல்வராக அல்லாமல் மூத்த சகோதரியாக வந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலுள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்கப் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுக்க மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மேற்கு வங்கத்திலும் மருத்துவர்கள் போராட்டத்தைக் கையிலெடுத்தார்கள்.

மாநில சுகாதாரத் துறை தலைமையகம் வெளியே பயிற்சி மருத்துவர்கள் கடந்த 5 நாள்களாகத் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என பயிற்சி மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கொல்கத்தா காவல் ஆணையர் மற்றும் சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்பது அவர்களுடையக் கோரிக்கைகளில் ஒன்றாக உள்ளது. சுகாதாரப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும், மேற்கு வங்கம் முழுக்க மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் மிரட்டு கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் பயிற்சி மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

முதல்வர் மமதா பானர்ஜியுடனான சந்திப்பு நேரலை செய்யப்பட வேண்டும் என்பதும் அவர்களுடையக் கோரிக்கையாக இருப்பதால், மாநில அரசு மற்றும் மருத்துவர்கள் இடையிலான பேச்சுவார்த்தை கடந்த 12 அன்று தொடங்கவில்லை. இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், நேரலை செய்ய மேற்கு வங்க அரசு மறுத்தது.

இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி இன்று பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடத்துக்கு நேரடியாகச் சென்றார்.

"உங்களுடையக் கோரிக்கைகளை பரிசீலனை செய்வேன். நான் ஆட்சியை தனியாக நடத்தவில்லை. உங்களுடையக் கோரிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மற்றும் காவல் துறை இயக்குநர் ஆகியோருடன் ஆலோசனை நடத்துவேன்.

உங்கள் மீது நான் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன். இது உத்தரப் பிரதேசம் அல்ல. மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு எதிரானவள் நான். உங்களுடையப் பணி மிகவும் உன்னதமானது.

முதல்வராக அல்லாமல் மூத்த சகோதரியாகவே உங்களைச் சந்திக்க வந்துள்ளேன். பிரச்னையைத் தீர்ப்பதற்கான கடைசி முயற்சியாக இங்கு வந்துள்ளேன். உங்களுடையக் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து குற்றவாளிகள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன்.

வெள்ளிக்கிழமை இரவு முழுக்க மழை பெய்தது. நீங்கள் இங்கே அமர்ந்திருப்பது என்னைப் பாதிக்கிறது. கடந்த 34 நாள்களாக இரவு முழுக்க உறங்காமல் இருக்கிறேன். நீங்கள் வீதிகளுக்கு வந்துள்ளதால், ஒரு பாதுகாவலராக நான் விழித்துக்கொண்டிருந்தேன்.

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் நலன் குழுக்களைக் கலைக்கிறேன். மருத்துவமனை முதல்வர்கள் தலைமையில் புதிய குழுவை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்தக் குழுக்களுக்கு மருத்துவமனை முதல்வர்கள் தலைவர்களாக இருப்பார்கள். பயிற்சி மருத்துவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவல் துறையின் பிரதிநிதிகள் இருப்பார்கள். நான் இந்த முடிவை எடுத்துள்ளேன்" என்றார் மமதா பானர்ஜி.

மமதா பானர்ஜியின் வருகையை வரவேற்ற பயிற்சி மருத்துவர்கள், தங்களுடையக் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்றார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in