
தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் சட்டவிரோதம் இருப்பது கண்டறியப்பட்டால், இது ரத்து செய்யப்படும் என உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
பிஹாருக்கு மட்டும் விதிக்கப்படும் ரத்தானது ஒட்டுமொத்த நாட்டுக்கும் பொருந்தும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிஹாரில் நடப்பாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பிறகு, வரைவு வாக்காளர் பட்டியலில் 65 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டன. ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்க செப்டம்பர் 1 வரை அவகாசம் வழங்கப்பட்டது. செப்டம்பர் 30 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது.
இதனிடையே, இந்த நடைமுறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வாக்காளர் பட்டியலில் விடுபட்டிருந்த பெயர்களைச் சேர்க்க வாக்காளர்கள் தங்களுடைய அடையாளத்தைக் காண்பிக்க தேர்தல் ஆணையத்தால் 11 ஆவணங்கள் பட்டியலிடப்பட்டிருந்தன. இதில் ஆதார் அட்டை இடம்பெறவில்லை.
இதுதொடர்புடைய வழக்கில் ஆதார் அட்டையையும் அடையாளத்துக்கான ஆவணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 8 அன்று உத்தரவிட்டது.
இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜாய்மால்யா பாக்சி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அக்டோபர் 7 அன்று வழக்கின் இறுதி விசாரணை நடைபெறும் அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் குறிப்பாக பிஹார் சார்ந்தும் வாதாட வேண்டும், நாடு முழுக்க சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வது பற்றியும் வாதாட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
தேர்தல் ஆணையத்தால் இறுதி வாக்காளர் பட்டியல் செப்டம்பர் 30 அன்று வெளியிடப்படுகிறது. அன்றைய நாள் விசாரணை நடைபெற வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேதியை மாற்ற ஒப்புக்கொள்ளவில்லை. இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுவது எவ்வித மாற்றத்தையும் உண்டாக்கப்போவதில்லை என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கோரினார்கள்.
மேலும், அரசியலமைப்புப் பாதுகாப்பு அம்சங்களில் சமரசம் செய்திருந்தால், சிறப்பு தீவிர திருத்தம் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. பிஹாருக்கு விதிக்கப்படும் உத்தரவு ஒட்டுமொத்த நாட்டுக்கும் பொருந்தும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்சரித்துள்ளார்கள்.
Special Intensive Revision | Bihar SIR | Supreme Court |