ஐஎஸ்ஐஎஸ் இந்தியத் தலைவர் கைது: அஸ்ஸாம் முதல்வர் கருத்து

நாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் தீவிரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வியாழக்கிழமை உறுதிபட தெரிவித்தார்.
ஐஎஸ்ஐஎஸ் இந்தியத் தலைவர் கைது: அஸ்ஸாம் முதல்வர் கருத்து

நாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் தீவிரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வியாழக்கிழமை உறுதிபட தெரிவித்தார்.

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த இரு தலைவர்களை அஸ்ஸாம் சிறப்புப் படை காவலர்கள், துப்ரி மாவட்டத்தில் புதன்கிழமை கைது செய்துள்ள நிலையில் முதல்வர் சர்மா இவ்வாறு கூறியுள்ளார்.

“பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாட்டில் தீவிரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்படும். மத அடிப்படைவாதிகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டம் தொடரும். தீவிரவாதிகளைக் கைது செய்த அஸ்ஸாம் காவல்துறைக்கு நன்றி.” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் இந்தியப் பிரிவு தலைவர்களாக செயல்படும் ஹாரீஸ் பரூக்கி என்கிற ஹரீஷ் அஜ்மல் பரூக்கி மற்றும் அவரது கூட்டாளி அனுராக் சிங் என்கிற ரேஹன் ஆகிய இருவரும் சர்வதேச எல்லையைக் கடந்து அஸ்ஸாமின் துப்ரி மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து சிறப்பு படைப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெனரல் பார்த்தசாரதி மஹந்தா மற்றும் சிறப்புப் படைப்பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் கல்யாண்குமார் பதக் தலைமையிலான படை தீவிர தேடுதல் வேட்டை நடத்தி இருவரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் சதி வேலையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அவர்கள் இருவரும் தேசியப் புலனாய்வுப் படைப்பிரிவினராலும் தேடப்பட்டு வந்தவர்கள் என்பது தெரியவந்தது. தீவிரவாதிகள் இருவரையும் காவலர்கள் தரம்சாலாவில் சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் குவஹாத்திக்கு அழைத்துவரப்பட்டனர் என ஐ.ஜி. பார்த்தசாரதி மஹந்தா தெரிவித்தார். ஹாரிஸ் கூட்டாளி அனுராக் சிங், பானிபட்டைச் சேர்ந்த மன்வீர் சிங் என்பவரின் மகன். இவர் இஸ்லாம் மதத்துக்கு மாறி தனது பெயரை ரேஹன் என வைத்துக் கொண்டார். இவரது மனைவி வங்கதேசத்தைச் சேர்ந்தவர்.

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பது, நிதி திரட்டுவது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபடவும், பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்களை நடத்தவும் இவர்கள் திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இருவரும் தேசியப் புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் மஹந்தா கூறினார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in