பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வழிவகை செய்யும் புதிய மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் ஆர்ஜி கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்தச் சம்பவத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் பெரும் போராட்டம் நடந்து வருகிறது.
இதனிடையே திரிணமூல் காங்கிரஸ் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய மமதா பானர்ஜி, பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வழிவகை செய்யும் புதிய மசோதா நிறைவேற்றப்படும் என்றார்.
"அடுத்த வாரம் சட்டப்பேரவையைக் கூட்டுவோம். பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வழிவகை செய்யும் புதிய மசோதாவானது 10 நாள்களுக்குள் நிறைவேற்றப்படும். இந்த மசோதாவை ஆளுநருக்கு அனுப்புவோம். இதற்கு அவர் ஒப்புதல் அளிக்கவில்லையெனில், ஆளுநர் மாளிகை வெளியே போராட்டத்தில் ஈடுபடுவோம். இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். இந்த முறை அவர் பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது" என்றார் மமதா பானர்ஜி.
பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்தும், போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்தும் பாஜக சார்பில் இன்று பந்த் கடைபிடிக்கப்படுகிறது.