
கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300-ஐ தாண்டியுள்ளது. இந்தச் சோகத்துக்கு மத்தியில் மனதை உருக்கும் சம்பவம் ஒன்றும் வயநாட்டில் நடந்துள்ளது.
நிலச்சரிவிலிருந்து தப்பி அருகிலுள்ள தேயிலைத் தோட்டத்துக்குச் சென்ற சுஜாதா என்பவரையும் அவருடையப் பேத்தியையும் காட்டு யானைக் கூட்டம் இரவு முழுக்கக் காத்துள்ளன.
சுஜாதாவின் பேட்டி குறித்து கேரள ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி:
"நாங்கள் இருந்த பகுதியில் கடல்போல நீர் சூழ்ந்திருந்தன. மரங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. நான் வெளியே பார்த்தபோது, அருகிலுள்ள இரண்டு அடுக்கு வீடு தகர்ந்துகொண்டிருந்தது. அது எங்களுடைய வீட்டின் மீது விழுந்து, எங்களுடைய வீட்டைச் சேதப்படுத்தியது. என் பேத்தி மிருதுளா அழுததைக் கேட்டு வெளியே வந்தேன். இடிபாடுகளிலிருந்து என் பேத்தியின் சிறு விரலைப் பிடித்து அவரை மீட்டேன். ஒரு துணியால் அவளைச் சுற்றி, வெள்ள நீரில் நீச்சலடிக்கத் தொடங்கினேன்.
அருகிலுள்ள தேயிலைத் தோட்டத்துக்குச் செல்ல முயற்சித்தேன். கரையை எட்டியவுடன், தேயிலைத் தோட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது காட்டு யானையைப் பார்த்தோம்.
யானையிடம் நாங்கள் மிகப் பெரிய துயரத்திலிருந்து வருகிறோம். மிகுந்த அச்சத்தில் இருக்கிறோம். வெளிச்சம் இல்லை, சுற்றியும் நீர் சூழ்ந்துள்ளது. நாங்கள் நீச்சலடித்துதான் வந்துள்ளோம். எங்களை எதுவும் செய்ய வேண்டாம் என்று யானையிடம் மன்றாடினேன். யானையின் கண்களில் நீர் கசிந்ததைப் பார்க்க முடிந்தது. நாங்கள் அந்த யானையின் காலடியில் சரணடைந்தோம். அருகில் இரு காட்டு யானைகள் இருந்தன. பொழுது விடியும் வரை யானையின் காலடியிலேயேதான் கடந்தோம். வெளியிலிருந்து ஆட்கள் வந்து எங்களை மீட்கும் வரை யானை அங்கேயே இருந்து எங்களைக் காத்தது. காலையிலும் யானையின் கண்களில் நீர்க் கசிவை பார்க்க முடிந்தது" என்றார் சுஜாதா.
பொழுது விடிந்த பிறகு, வெளியாட்கள் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களை ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். தங்க இடமும், உடுத்த உடையும் அவர் கொடுத்துள்ளார்கள். சுஜாதா தற்போது மேப்பாடியிலுள்ள மீட்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
பெரும் பேரிடருக்கு மத்தியில் ஒரு பாட்டியையும் பேத்தியையும் இரவு முழுக்கக் காட்டு யானை பாதுகாத்தது குறித்த செய்தி பலரைக் கண்கலங்கச் செய்துள்ளது.