
தில்லி ரயில் நிலையத்தில் 18 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கும், ரயில்வே அமைச்சகத்திற்கும் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது தில்லி உயர் நீதிமன்றம்.
கடந்த பிப்.16-ம் தேதி இரவில் தில்லி ரயில் நிலையத்தின் 13 மற்றும் 14-வது நடைமேடையில் ரயில் ஏறுவதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காத்திருந்தார்கள். இரவு 10 மணி அளவில் ரயில் வந்தபோது, அதில் ஏறுவதற்காக காத்திருந்த மக்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 5 சிறுவர், சிறுமியர் உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்தார்கள். இந்த கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக தில்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
குறிப்பாக, ரயில்வே சட்டத்தின் 147-வது பிரிவை கண்டிப்பான முறையில் அமல்படுத்த உத்தரவிடுமாறு பொது நல வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது. ரயில் பெட்டியின் எண்ணிக்கை அடிப்படையில் பயணிகளை கட்டுப்படுத்துவும், இதை மீறுபவர்களுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கவும் இந்த சட்டப்பிரிவு வழிவகை செய்கிறது.
தில்லியின் தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாய மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடேலா அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது மேற்கூறிய சட்டப் பிரிவை அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இந்திய ரயில்வேயிடம் உயர் நீதிமன்ற அமர்வு கேள்வி எழுப்பியது.
மேலும், `கண்டிப்பான வகையில், இந்த எளிய விஷயத்தை நீங்கள் செயல்படுத்தியிருந்தால், அந்த நிகழ்வை (கூட்ட நெரிசல்) தவிர்த்திருக்கலாம்’ என்று கருத்து தெரிவித்தார் நீதிபதி உபாத்யாய.
அத்துடன், `ரயில் பெட்டிகளில் இருக்கும் இருக்கைகளைத் தாண்டி, அளவுக்கதிகமான பயணச்சீட்டுகளை விற்றது ஏன்?, அதனால்தான் பிரச்னை ஏற்பட்டது’ என்று கருத்து தெரிவித்தது உயர் நீதிமன்ற அமர்வு.
இதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார் இந்திய ரயில்வே சார்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா. இந்த பொது நல வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மார்ச் 26-க்கு ஒத்திவைக்கப்பட்டது.