
`ஜம்மூ காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அமைதியும், சகஜ நிலையும் திருப்பிவிட்டது என மார்தட்டிக் கொண்டிருந்த பாஜகவின் கூற்றுகள் அனைத்தும் பொய் என அங்கு நடந்த தீவிரவாத தாக்குதல்கள் அம்பலப்படுத்தியுள்ளது’ என பாஜகவுக்குக் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி.
`வாழ்த்துச் செய்திகளுக்கு பதிலளித்துக் கொண்டிருக்கும் பிரதமருக்கு ஜம்மூ-காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலால் மரணமடைந்தவர்கள் குடும்பத்தினரின் குரல் கேட்கவில்லை’ என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
`கடந்த மூன்று நாட்களில் ஜம்மூ காஷ்மீரின் ரியசி, கத்துவா, டோடா பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்துள்ளது. ஆனால் பிரதமர் இன்னும் தேர்தல் வெற்றிகளைக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார். நாட்டுக்கு எதிராகச் சதி செய்பவர்களை பாஜக ஆட்சியில் ஏன் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்’ எனவும் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார் ராகுல்.
`பாகிஸ்தான் தலைவர்களுக்கு பதிலளித்துக் கொண்டிருக்கும் பிரதமருக்கு தீவிரவாதிகள் தாக்குதலுக்கு கண்டனங்களைத் தெரிவிக்க நேரமில்லை. இதற்கும் நரேந்திர மோடியும் அவரது அமைச்சர்களும் பதவியேற்ற நாளில் தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றள்ளது’ என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா பிரதமருக்குத் தன் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
`காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் இருக்கும் 3 மக்களவைத் தொகுதிகளில் பாஜக போட்டியிடாதது, அதன் `புதிய காஷ்மீர்’ கொள்கை தோல்வி அடைந்ததன் வெளிப்பாடு. மோடியின் கடந்த பத்தாண்டு ஆட்சிக்காலத்தில் குறைந்தபட்சம் 19 முறை தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்று, அதில் பல அப்பாவி உயிர்கள் பறிபோயுள்ளது. அதிலும் குறிப்பாக பீர் பாஞ்சல், பூஞ்ச், ரஜோரி பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளாக எல்லை தாண்டிய பயங்கரவாதச் செயல்கள் அதிக அளவில் தலைதூக்கியுள்ளன’ என்றார் பவன் கேரா.
ஜம்மூ-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், ஜூன் 9-ல் ரியசி பகுதியிலும், ஜூன் 11-ல் கத்துவா பகுதியிலும், ஜூன் 12-ல் டோடா பகுதியிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடைபெற்றது.