
மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் தேர்தலுக்குப் பிறகு கூட்டணி வைப்பதில் எந்தப் பிரச்னையும் இருக்காது என தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் கடந்த 10 ஆண்டுகளில் முதன்முறையாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றுள்ளது. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் சட்டப்பேரவைத் தேர்தல் இது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி இணைந்து சந்தித்துள்ளன. மெஹபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது.
இதனிடையே, ஹரியானாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவடைந்தவுடன் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. இதில் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் - தேசிய மாநாட்டுக் கட்சி வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டிருந்தாலும், ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பாலான இடங்கள் யாருக்கும் கிடைக்காது என்று கணிக்கப்பட்டன. நிறைய கருத்துக் கணிப்புகள் தொங்கு சட்டப்பேரவை அமையும் என்று கணித்துள்ளன.
இதனால், மக்கள் ஜனநாயகக் கட்சி ஆட்சியைத் தீர்மானிக்கும் இடத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி குறித்து ஃபரூக் அப்துல்லா செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
"தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியை ஏன் அமைக்கக் கூடாது. நாங்கள் அனைவரும் ஜம்மு-காஷ்மீர் மக்களின் நிலையை மேம்படுத்த வேண்டும் என்ற ஒரே விஷயத்துக்காகப் பணியாற்றும்போது, இதில் என்ன பெரிய விஷயம் உள்ளது. தேர்தலில் நாங்கள் எதிரிகளாக இருக்கலாம். ஆனால், எனக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. காங்கிரஸ் கட்சிக்கும் ஆட்சேபனை இருக்காது என உறுதியாக நம்புகிறேன்.
எங்களுடையக் கூட்டணி வெற்றி பெற்றால், நான் முதல்வராக இருக்க மாட்டேன். இதைத் தெளிவுபடுத்தி விடுகிறேன். என்னுடைய பணியை நான் செய்து முடித்துவிட்டேன். எப்படி வலுவான அரசை அமைக்க முடியும் என்பது மட்டும்தான் என்னுடையப் பிரச்னையாக இருக்கும்.
சுயேச்சை சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவைக் கோருவதிலும் எனக்குப் பிரச்னை இல்லை. அவர்களிடம் சென்று நான் மன்றாட மாட்டேன். அரசுக்கு வலு சேர்க்க வேண்டும் என நினைத்தால், அவர்கள் இணையலாம். வரவேற்போம்" என்றார் ஃபரூக் அப்துல்லா.