
ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதால் சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளாரா என்பது பற்றி அமித் ஷா விளக்கமளித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேட்டியளித்துள்ளார். குடியரசு துணைத் தலைவர் பதவியை ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்தது பற்றியும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டது தொடர்பாக விளக்கியுள்ளார்.
"ஜெகதீப் தன்கரின் ராஜினாமா கடிதத்திலேயே தெளிவாக உள்ளது. உடல்நலத்தைக் காரணமாகக் குறிப்பிட்டுள்ளார். தனது சிறப்பான பதவிக் காலத்துக்காக பிரதமர், அமைச்சர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அனைவருக்கும் அவர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்" என்றார் அமித் ஷா.
ஜெகதீப் தன்கர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளாரா என்ற கேள்விக்குப் பதிலளித்த அமித் ஷா, "உண்மை, பொய் பற்றிய உங்களுடைய பார்வை எதிர்க்கட்சியினர் சொல்வதைச் சார்ந்து அமைந்துள்ளது. இவற்றையெல்லாம் நாம் பெரிதுபடுத்தக் கூடாது. தன்கர் அரசியலமைப்புப் பதவியை வகித்துள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட மருத்துவக் காரணங்களுக்காகவே அவர் ராஜினாமா செய்துள்ளார். இந்த விவகாரம் பற்றி அதிகம் பேசத் தேவையில்லை" என்றார் அமித் ஷா.
குடியரசு துணைத் தலைவர் பதவியிலிருந்து ஜெகதீப் தன்கர் திடீரென ராஜினாமா செய்தது குறித்து எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். ஜெகதீப் தன்கர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை எனக் கேள்விகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், அமித் ஷா இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜெகதீப் தன்கரைத் தொடர்ந்து, குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்டம்பர் 9 அன்று நடைபெறுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். திருப்பூரில் பிறந்த இவர் கோவையிலிருந்து இருமுறை நாடாளுமன்றத்துக்குத் தேர்வாகியுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக தமிழ்நாட்டிலிருந்து ஒருவர் தேர்வு செய்யப்பட்டது குறித்தும் அமித் ஷா விளக்கியுள்ளார்.
"குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வேட்பாளர் தென்னிந்தியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்டிருப்பது இயல்பான ஒன்று. காரணம், குடியரசுத் தலைவர் நாட்டின் கிழக்குப் பகுதியிலிருந்து வந்துள்ளார். மேற்கு மற்றும் வடக்குப் பகுதியிலிருந்து பிரதமர் வந்துள்ளார்" என்றார் அமித் ஷா. மேலும், 2026-ல் தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளதால் தமிழ்நாட்டிலிருந்து ஒருவர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற கோணத்தையும் அவர் மறுத்துள்ளார்.
"தமிழ்நாட்டில் நாங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் முன்பு தேர்தல்களில் போட்டியிட்டுள்ளோம். நாங்கள் இடங்களையும் வென்றுள்ளோம்" என்றார்.
சி.பி. ராதாகிருஷ்ணன் குறித்து பேசிய அவர், "ராதாகிருஷ்ணன் நீண்ட அரசியல் வாழ்க்கையைக் கொண்டவர். நாடாளுமன்றத்துக்கு இருமுறை தேர்வானவர். தமிழ்நாட்டில் கட்சியின் தலைவராக இருந்துள்ளார். ஜார்க்கண்ட், புதுச்சேரி, மஹாராஷ்டிரத்தில் ஆளுநராக இருந்துள்ளார். பொது வாழ்க்கையில் தூய்மையானவராக இருந்துள்ளார். மிகவும் முதிர்ச்சியடைந்த அரசியல்வாதி.
பிரதமர் மோடிக்கு ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்பு உள்ளது. எனக்கும் தொடர்பு உள்ளது. நாங்கள் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்பிலிருப்பதால் தான் மக்கள் எங்களைத் தேர்வு செய்தார்களா? ஆர்எஸ்எஸ் உடன் தொடர்பு வைத்திருப்பது எதிர்மறையான அம்சமா? அப்படியில்லை. அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் எல்கே அத்வானிக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்பு இருந்தது. அதுபோல ராதாகிருஷ்ணனுக்கும் ஆர்எஸ்எஸ் உடன் தொடர்பு இருக்கிறது" என்றார் அமித் ஷா.
Amit Shah | Vice President Election | Jagdeep Dhankar | CP Radhakrishnan | C.P. Radhakrishnan | Union Home Minister