மத்திய அரசு ஊழியர்களுக்காக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை முன்வைத்து மத்திய அரசை விமர்சித்துக் கருத்து தெரிவித்திருந்தார் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஏன் பழைய ஓய்வூதியத்திட்டம் அமலில் இல்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ரவிசங்கர் பிரசாத்.
செய்தியாளர்கள் சந்திப்பில் ரவிசங்கர் பிரசாத் பேசியவை பின்வருமாறு:
`கடந்த 2 வருடங்களாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை மிகப் பெரிய பிரச்னையாக மாற்றியது காங்கிரஸ் கட்சி. ஹிமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஹிமாச்சலில் அறிமுகப்படுத்துவோம் என்று அறிவித்தார் பிரியங்கா காந்தி.
தேர்தல் பிரச்சாரத்தின்போது வாக்குறுதி அளித்தபடி ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதா என்பதை காங்கிரஸ் கட்சி, குறிப்பாக ராகுல் காந்தி நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
மேலும் கர்நாடக, தெலங்கானா, ஹிமாச்சல் மாநிலங்களில் வாக்குறுதி அளித்தபடி ஏன் பழைய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவில்லை என்பதை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். வாக்குகளைப் பெறவே தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் கட்சி இத்தகைய அறிவிப்பை வெளியிட்டது. பொதுமக்கள் அக்கட்சி மீது உள்ள நம்பிக்கையை இழந்துவிட்டனர்.
பிரதமர் மோடி குறித்து நாங்கள் பெருமை அடைகிறோம். மத்திய அரசு ஊழியர்களின் பிரச்னைகளை அவர் புரிந்துகொண்டதால், அதற்காகக் குழு அமைத்து, அர்த்தமான முறையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது’.
ஜனவரி 1, 2004-க்குப் பிறகு மத்திய அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்குப் பயனளிக்கும் வகையில், கடந்த வாரம் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது மத்திய அமைச்சரவை. இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 25 வருடப் பணிக்குப் பிறகு ஓய்வூதியம் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.