
110 மில்லியன் டாலர் மதிப்புள்ள பிரிட்டிஷ் கடற்படையின் அதிநவீன பாதுகாப்பு சொத்தாக கருதப்படும் எஃப்-35பி லைட்னிங் II போர் விமானம், கடந்த ஜூன் 14 அன்று கேரளத்தின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. அதன்பிறகு 10 நாள்களுக்கும் மேலாகியும் போர் விமானம் அங்கேயே நிற்கின்றது.
பிரிட்டிஷ் ஐந்தாம் தலைமுறை அதிநவீன போர் விமானம், இந்திய மண்ணில் உள்ள ஒரு விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால், இயல்பாகவே அது தொடர்பான ஊகங்கள் பொது வெளியில் கிளம்பியுள்ளன.
கேரள கரையில் இருந்து 100 கடல் மைல்களுக்கு அப்பால், பிரிட்டன் கடற்படையின் ஹெச்.எம்.எஸ். பிரின்ஸ் விமானம் தாங்கி போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக மேற்கொள்ளப்படும் பயிற்சியின் ஒரு பகுதியாக அந்த போர்க் கப்பலில் இருந்து கிளம்பி, இந்த எஃப்-35 போர் விமானம் வானத்தில் பறந்துள்ளது.
ஆரம்பத்தில் மோசமான வானிலை மற்றும் எரிபொருள் குறைவாக இருந்த காரணத்தால் போர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதன் பின்னர் போர் விமானத்தின் ஹைட்ராலிக் அமைப்பில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.
பிரிட்டனைச் சேர்ந்த நிபுணர்கள் குழு முயற்சி செய்தும், போர் விமானத்தை பறக்க வைக்கும் முயற்சி பலனளிக்கவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் பருவமழை பெய்துவரும் நிலையில், அந்த போர் விமானத்தை விமானங்கள் நிறுத்தி வைக்கப் பயன்படுத்தப்படும் கட்டடத்திற்கு மாற்ற இந்தியா முன்வந்தது. ஆனால் அதற்கு பிரிட்டன் கடற்படை மறுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது திருவனந்தபுரம் விமான நிலையத்தின் 4-வது எண் விமான நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டுள்ள பிரிட்டன் போர் விமானத்திற்கு, மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF) வீரர்களால் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.