போரை அமெரிக்கா நிறுத்தவில்லை, இதுதான் நடந்தது...: வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர்

"பாகிஸ்தானுக்கு சண்டையை நிறுத்த வேண்டும் என்றால், பாகிஸ்தான் தான் எங்களிடம் நேரடியாகப் பேச வேண்டும்."
போரை அமெரிக்கா நிறுத்தவில்லை, இதுதான் நடந்தது...: வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர்
ANI
1 min read

இந்தியா, பாகிஸ்தான் இடையிலான சண்டையை அமெரிக்கா நிறுத்தவில்லை என்ற இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் நடந்ததை எடுத்து விவரித்துள்ளார்.

ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தத் தொடங்கியது. இந்தியாவுக்கு இதற்குப் பதில் தாக்குதல் நடத்தியது. மே 10 அன்று சண்டையை நிறுத்திக்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இந்த அறிவிப்பை முதலில் வெளியிட்டது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அமெரிக்காவின் தலையீட்டிலேயே இந்த சண்டை நிறுத்தப்பட்டதாக டொனால்ட் டிரம்ப் கோரினார். மேலும், ஜம்மு-காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் இணைந்து செயல்படத் தயார் என்பதையும் டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்காவின் தலையீட்டை இந்தியா தொடர்ந்து மறுத்து வந்தது. இந்நிலையில், நெதர்லாந்தைச் சேர்ந்த பிராட்காஸ்டருக்கு பேட்டியளித்த ஜெய்ஷங்கர் இந்தியா, பாகிஸ்தான் போர் நிறுத்தம் குறித்து வெளிப்படையாகப் பதிலளித்துள்ளார்.

"ஆபரேஷன் சிந்தூரில் தெளிவான செய்தி இருந்தது. ஏப்ரல் 22 அன்று நிகழ்ந்த சம்பவம் மீண்டும் நிகழ்ந்தால், அதற்குத் தக்க பதிலடி இருக்கும். நாங்கள் பயங்கரவாதிகளைக் கொல்வோம். அவர்கள் பாகிஸ்தானில் இருந்தாலும், அவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்பது தான் அந்தச் செய்தி.

ஆபரேஷன் தொடர்கிறது என்பது இருவரும் சண்டையிட்டுக் கொள்வதைப் போன்றது அல்ல. தற்போது சண்டை மற்றும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, ஆபரேஷன் நிறுத்தப்பட்டுள்ளது.

சண்டையை நிறுத்த வேண்டும் என பாகிஸ்தான் ராணுவம் செய்தி அனுப்பியது. இதற்கு ஏற்ப நாங்கள் செயல்பட்டோம். அமெரிக்கா, அமெரிக்காவில்தான் இருந்தது.

போர் நிறுத்தமானது இந்தியா, பாகிஸ்தான் இடையே நேரடியாகப் பேசி முடிக்கப்பட்டது. அமெரிக்கா உள்பட அனைவரிடத்திலும் நாங்கள் கூறியது ஒன்று தான். பாகிஸ்தானுக்கு சண்டையை நிறுத்த வேண்டும் என்றால், பாகிஸ்தான் தான் எங்களிடம் நேரடியாகப் பேச வேண்டும். அவர்களிடத்திலிருந்து தான் நாங்கள் அதைக் கேட்க வேண்டும். அவர்களுடைய ஜெனரல் எங்களுடைய ஜெனரலை அழைத்து சண்டையை நிறுத்துவது பற்றி பேச வேண்டும் என்றோம். அதுதான் நடந்தது.

இந்தியா, பாகிஸ்தான் இடையே பிரச்னை இருக்கிறது. இதை இரு நாடுகள் பேசித் தீர்த்துக்கொள்வோம்" என்றார் ஜெய்ஷங்கர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in