ஒவ்வொரு வருடமும் நாய் கடியால் இந்தியாவில் தோராயமாக 20,000 நபர்கள் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
நாய் கடி உயிரிழப்புகள் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
`ரேபிஸ் என்பது தடுப்பூசியால் தடுக்கக்கூடிய வைரஸ் தொற்று நோயாகும். இந்நோய் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளது. ரேபிஸ் வைரஸ் பல மிருகங்களில் இருந்தாலும், மனிதர்களுக்கு ஏற்படும் ரேபிஸ் தொற்று பிரதானமாக நாய்களின் மூலமாகவே ஏற்படுகிறது. அதிலும் ரேபிஸால் ஏற்படும் 99 சதவீத உயிரிழப்புகளுக்கு நாய்க்கடியே காரணமாக உள்ளது.
நாய்க்கடிக்குப் பிறகு மேற்கொள்ளவேண்டிய முறையான மருத்துவ சிகிச்சைகள் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருக்கும் காரணத்தால், ஒவ்வொரு வருடமும் ஆசியா மற்றும் ஆஃபிரிக்க கண்டத்தில் சுமார் 55,000 உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
அதிலும் உலகளவில் ரேபிஸ் தொற்றால் ஏற்படும் மரணங்களில் 36 சதவீத மரணங்கள் இந்தியாவில் ஏற்படுகின்றன. இந்தியாவில் ஏற்படும் ரேபிஸ் மரணங்களின் எண்ணிக்கை குறித்த உறுதியான தகவல்கள் தெரியவில்லை. ஆனால் தற்போது இருக்கும் தரவுகளின் அடிப்படையில் ரேபிஸ் தொற்றால் சுமார் 18,000 முதல் 20,000 வரையிலான மரணங்கள் இந்தியாவில் ஏற்படுகின்றன.
உடனடியான மற்றும் தகுந்த மருத்துவ சிகிச்சையால் ரேபிஸ் வைரஸ் தொற்றால் ஏற்படும் மனித உயிரிழப்புகளை 100 சதவீதம் தடுக்க முடியும். மேலும் நாய்க்கடியால் பொதுமக்களுக்கு ஏற்படும் ரேபிஸ் தொற்றைத் தடுப்பதற்கு வளர்ப்பு மற்றும் தெரு நாய்களுக்கு சரியான நேரத்தில் தடுப்பூசி செலுத்த வேண்டும்’.