பாபா சித்திக் கொல்லப்பட்டது ஏன்? சல்மான் கான் தொடர்பு என்ன?: சினிமாவை மிஞ்சும் நிஜம்!

"எங்களுக்கு யார் மீதும் எந்தவொரு தனிப்பட்ட வெறுப்புணர்வும் இல்லை. ஆனால், சல்மான் கான், தாவூத் கும்பலுக்கு யாரேனும் உதவினால்.."
பாபா சித்திக் கொல்லப்பட்டது ஏன்? சல்மான் கான் தொடர்பு என்ன?: சினிமாவை மிஞ்சும் நிஜம்!
3 min read

தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) மூத்த தலைவர் பாபா சித்திக் கடந்த சனிக்கிழமை மும்பையில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தக் கொலை சம்பவம் நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. கொலை தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது நபரை மும்பை காவல் துறையினர் தேடி வருகிறார்கள்.

பாபா சித்திக்கைக் கொலை செய்தது யார்?

பாபா சித்திக் கொலையில் மூன்று பேர் ஈடுபட்டுள்ளார்கள். ஹரியாணாவைச் சேர்ந்த 23 வயதுடைய குர்மீல் பால்ஜித் சிங், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய தர்மராஜ் காஷ்யப் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மூன்றாவது நபரான உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷிவ்குமார் கௌதம் காவல் துறையினரால் தேடப்பட்டு வருகிறார்.

கொலை செய்தது எப்படி?

பாபா சித்திக் கொலை செய்ய நாளன்று தசரா கொண்டாடப்பட்டு வந்தது. இதை முன்னிட்டு ஊர்வலம் நடத்தப்பட்டு பட்டாசு வெடிக்கப்பட்டு வந்தன. இதைப் பயன்படுத்தி பாபா சித்திக்கை சுட்டுக்கொன்றிருக்கிறார்கள்.

இவர்களுடையத் திட்டத்தின்படி, குர்மீல் மற்றும் காஷ்யப் தான் பாபா சித்திக்கை சுட வேண்டும். ஆனால், கூட்டம் அதிகளவில் இருந்ததாலும், சித்திக்குக்கு காவல் துறை பாதுகாப்பு இருந்ததாலும் ஷிவ்குமார் துப்பாக்கியால் சுட்டார்.

மூன்று பேரிடமும் மிளகாய் பொடி மற்றும் பெப்பர் ஸ்ப்ரே இருந்துள்ளது. ஷிவ்குமார் துப்பாக்கியால் சுட்டவுடன், சித்திக் பாதுகாவலர் மீது இவர்கள் மிளகாய் பொடியைத் தூவியிருக்கிறார்கள். துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து ஷிப்குமார் கூட்டத்தில் மறைந்து தப்பித்துச் செல்ல, மற்ற இருவர் பிடிபட்டார்கள்.

கைதானவர்கள் சொல்வது என்ன?

காவல் துறையினர் விசாரணையின்போது தங்களை அப்பாவிகளாகக் காட்டிக்கொண்டதாகவும் தப்பியோடியே ஷிவ்குமார்தான் மூளையாகச் செயல்பட்டதாகவும் கூறியிருக்கிறார்கள். மேலும், லாரன்ஸ் பிஷ்னாய்-க்காக செயல்படுவதாகவும் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

யார் இந்த லாரன்ஸ் பிஷ்னாய்?

பஞ்சாபில் 1993-ல் பிறந்த இவர், 2010-ல் டிஏவி கல்லூரியில் படிப்பதற்காக சண்டிகருக்கு இடம்பெயர்ந்தார். 2011-ல் பஞ்சாப் பல்கலைக்கழக வளாக மாணவர் கவுன்சிலில் இணைந்தார். அங்கு கோல்டி பிரார் நட்பு கிடைக்கிறது. இதன்பிறகு, பல்கலைக்கழக அரசியலிலிருந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள்.

லாரன்ஸ் பிஷ்னாயின் கும்பல் மிரட்டிப் பணம் பறித்தல், போதைப் பொருள் கடத்தல், கொலை உள்பட பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது. லாரன்ஸ் பிஷ்னாய் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

லாரன்ஸ் பிஷ்னாய் 2018-ல் மிகப் பெரிய அளவில் பேசுபொருளானார். லாரன்ஸ் பிஷ்னாய் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது காவல் துறையினர் கட்டுப்பாட்டிலிருந்த இவர், "ஜோத்பூரில் வைத்து சல்மான் கொல்லப்படுவார். அப்போதுதான் எங்களுடைய உண்மையான அடையாளம் குறித்து அவர் தெரிந்துகொள்வார்" என்று கூறினார். சல்மான் கானுக்கு மிகவும் வெளிப்படையாக அச்சுறுத்தல் விடுத்தது கவனம் ஈர்த்தது.

சல்மான் கான் - லாரன்ஸ் பிஷ்னாய் இடையே என்ன பிரச்னை?

1998-ல் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் படப்பிடிப்புக்குச் சென்ற சல்மான் அரியவகை மானை வேட்டையாடியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. சல்மான் கான் தவிர்த்து மேலும் 4 நடிகர், நடிகைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டன.

சல்மான் கான் வேட்டையாடியதாகக் குற்றம்சாட்டப்பட்ட மான் பாதுகாக்கப்பட வேண்டிய மான் இனம்.

இந்த வழக்கிலிருந்து நீதிமன்றம் வழங்கிய பிணை மூலம் சிறையிலிருந்து வெளியே வந்தார் சல்மான் கான்.

சல்மான் கான் வேட்டையாடியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள மான் வகையானது பிஷ்னாய் சமூகத்தினர் புனிதமாகக் கருதும் மான் வகையைச் சேர்ந்தது. இதன் காரணமாகவே, பிஷ்னாய் சமூகத்தினர் 1998-ல் சல்மான் கான் மீது புகாரளித்தார்கள்.

மானை வேட்டையாடியதற்காக சல்மான் கான் மீது லாரன்ஸ் பிஷ்னாய் வெறுப்புணர்வில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

லாரன்ஸ் பிஷ்னாய் தற்போது எங்கே இருக்கிறார்?

ஜூன் 2022-ன்படி, லாரன்ஸ் பிஷ்னாய் மீது 36 குற்ற வழக்குகள் உள்ளன. 21 வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருந்தன. 9 வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 6 வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். தில்லி திஹார் சிறையிலிருந்த லாரன்ஸ் பிஷ்னாய் ஆகஸ்ட் 2023-ல் ஆமதாபாத்தில் உள்ள சபர்மதி சிறையிலடைக்கப்பட்டார்.

சிறையிலிருந்தும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் பிஷ்னாய்

சல்மான் கான் மட்டுமின்றி, மற்றொரு வழக்கிலும் லாரன்ஸ் பிஷ்னாய் பிரபலமாக அறியப்பட்டார். பஞ்சாபி பாடகர் சித்து மூசேவாலா 2022-ல் கொல்லப்பட்டார். இந்தக் கொலைக்கு கோல்டி பிரார் பொறுப்பேற்றார்.

2022-ல் லாரன்ஸ் பிஷ்னாய் சிறையிலிருந்தபோதிலும், இவர் சார்பாகவே சித்து மூசேவாலா கொலையின் பொறுபை ஏற்பதாக கோல்டி பிரார் தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமின்றி சிறையிலிருந்தாலும், காலிஸ்தான் ஆதரவுக் குழுவினருடன் லாரன்ஸ் பிஷ்னாய் தொடர்பிலிருப்பதாக தேசிய விசாரணை முகமை தெரிவித்தது. திஹார் சிறையிலிருந்தாலும் சபர்மதி சிறையிலிருந்தாலும் லாரன்ஸ் பிஷ்னாய்-க்கு அலைபேசியைப் பயன்படுத்த சகல வசதிகளும் கிடைப்பதாகச் சொல்லப்படுவதுண்டு. குறிப்பாக சிறையிலிருந்தபடி, பாகிஸ்தானில் உள்ள ரௌடி கும்பல் தலைவர் ஒருவரிடம் வீடியோ மூலம் பேசியது வைரலானது.

சல்மான் கான் மீது கொலை முயற்சி

கடந்த ஏப்ரல் 14 அன்று மும்பை பாந்த்ராவிலுள்ள சல்மான் கான் இல்லம் வெளியே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார்கள். இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் கூறுகையில், "சல்மான் கானைக் கொல்ல பிஷ்னாய் கும்பல் ரூ. 25 லட்சத்துக்கு ஒப்பந்தம் பேசியுள்ளது. ஆகஸ்ட் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை பல மாதங்களாகக் கொலைக்குத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

பாபா சித்திக் கொல்லப்பட்டது ஏன்?

தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக், சல்மான் கானுக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படுபவர். பாபா சித்திக் கொலையைத் தொடர்ந்து, பேஸ்புக் பதிவு ஒன்று கவனம் பெற்றுள்ளது. லாரன்ஸ் பிஷ்னாய் ஆதரவாளராக அறியப்படும் ஷுபு லோங்கர் (அ) ஷுபம் லோங்கர், பாபா சித்திக் கொலையை அனுஜ் தாபன் மரணத்துடன் தொடர்புப்படுத்தி பதிவிட்டுள்ளார்.

சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கில் கைதாகி கட்டுப்பாட்டிலிருந்தவர் அனுஜ் தாபன். இவர் கடந்த மே 1 அன்று தற்கொலை செய்துகொண்டார்.

"எங்களுக்கு யார் மீதும் எந்தவொரு தனிப்பட்ட வெறுப்புணர்வும் இல்லை. ஆனால், சல்மான் கான் அல்லது தாவூத் கும்பலுக்கு யாரேனும் உதவினால், அவர்கள் தயாராக இருக்க வேண்டும். எங்களுடையச் சகோதரர்களின் உயிரிழப்புக்கு யாரேனும் காரணமாக இருந்தால், நாங்கள் பதிலடி கொடுப்போம். நாங்கள் ஒருபோதும் முதலில் தாக்குதலில் ஈடுபட மாட்டோம்" என்று சம்பந்தப்பட்ட அந்த பேஸ்புக் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பதிவின் உண்மைத்தன்மை குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகிறார்கள். ஷுபம் லோங்கரையும் அவர்கள் தேடி வருகிறார்கள்.

முன்னதாக, ஷுபம் லோங்கரின் சகோதரரும் கொலைக்குத் திட்டம் தீட்டியவர்களில் ஒருவருமான பிரவீன் லோங்கரை மும்பை காவல் துறையினர் இன்று கைது செய்தார்கள்.

சினிமாவை மிஞ்சும் நிஜம்

பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா எக்ஸ் தளப் பக்கத்தில் இந்தச் சம்பவங்களைத் தொகுத்து குறிப்பிடுகையில், "பாலிவுட் எழுத்தாளர் ஒருவர் இதுபோன்ற கதையைக் கொண்டு வந்தால், நம்பவே முடியாத அபத்தமான கதையை எழுதியதற்காக சம்பந்தப்பட்ட அந்த எழுத்தாளரை நசுக்கி வீசியிருப்பார்கள்" என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in