
வரும் செப்டம்பர் 9 அன்று நடைபெறவுள்ள குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கு, எதிர்க்கட்சிகள் அடங்கிய இண்டியா கூட்டணியின் வேட்பாளராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்ஷன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.
பின்னணி
கடந்த 1946 ஜூலை 8-ல் அன்றைய ஹைதராபாத் சமஸ்தானத்திற்கு உட்பட்ட ரங்கா ரெட்டி மாவட்டத்தில் பிறந்த சுதர்ஷன் ரெட்டி, சட்டப்படிப்பு முடித்த கையோடு 1971-ல் ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேச பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்தார்.
ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் ரிட் மற்றும் சிவில் விவகாரங்களில் பயிற்சி பெற்ற ரெட்டி, 1988-1990 காலகட்டத்தில் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றினார். அதன்பிறகு புகழ்பெற்ற ஹைதராபாத் ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தின் சட்ட ஆலோசகராகவும், வழக்கறிஞராகவும் செயல்பட்டார்.
பின்னர் ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக 1995 மே 2 அன்று நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து 2005 டிசம்பர் 5 அன்று கௌஹாத்தி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், அதன் தொடர்ச்சியாக 2007 ஜனவரி 12 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.
நான்கரை ஆண்டுகள் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய பிறகு 2011 ஜூலை 8 அன்று அவர் பணி ஓய்வு பெற்றார்.
2013 மார்ச்சில் கோவாவின் முதல் லோக் ஆயுக்தாவாக சுதர்ஷன் ரெட்டி நியமிக்கப்பட்டார், ஆனால் ஏழு மாதங்களுக்குள் தனிப்பட்ட காரணங்களைச் சுட்டிக்காட்டி அவர் பதவியை ராஜினாமா செய்தார். ஹைதராபாத்தில் உள்ள சர்வதேச நடுவர் மற்றும் மத்தியஸ்த மையத்தின் நிர்வாகக் குழுவில் அவர் இருப்பதாக இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய தீர்ப்புகள்
ஜூலை 2011: இந்திய வரி ஏய்ப்பாளர்கள் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைக்க நீதிபதி சுதர்ஷன் ரெட்டி அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.
ஜூலை 2011: மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கைகளில் பழங்குடி இளைஞர்களை சிறப்பு காவல் அதிகாரிகளாக ('கோயா கமாண்டோக்கள்' மற்றும் சல்வா ஜூடும் போன்றவை) பயன்படுத்துவது சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று நீதிபதி எஸ்.எஸ். நிஜ்ஜாருடன் இணைந்து நீதிபதி சுதர்ஷன் ரெட்டி அறிவித்தார்.
சுதர்ஷன் ரெட்டி குறித்து விவரித்த காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே,
`சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதிக்காக தொடர்ச்சியாக துணிச்சலுடன் போராடி வருகிறார். அவர் ஓர் ஏழ்மையான நபர், (அவர் வழங்கியுள்ள) பல்வேறு தீர்ப்புகளை வாசித்தால், ஏழை மக்களுக்கு அவர் எவ்வாறு சாதகமாக இருந்தார் என்பதும் அரசியலமைப்பு மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தார் என்பதும் தெரியும்.’ என்றார்.