
பிரதமர் நரேந்திர மோடியின் தனி செயலராக இந்திய வெளியுறவு அதிகாரி (ஐ.எஃப்.எஸ்.) நிதி திவாரியை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த நிதி திவாரி, 2013 குடிமைப் பணித் தேர்வில் 96-வது இடத்தைப் பெற்றார். இதைத் தொடர்ந்து, அவருக்கு இந்திய வெளியுறவு பணி ஒதுக்கப்பட்டது. குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு முன்பு உ.பி. மாநில அரசுப் பணியில் வணிகவரித்துறை உதவி ஆணையராக அவர் பணியாற்றினார்.
இந்திய வெளியுறவு பணியில் இணைந்த நிதி திவாரி வெளியுறவு அமைச்சகத்தில் நேரடியாகப் பணியாற்றினார். குறிப்பாக, அமைச்சகத்தின் ஆயுதக் குறைப்பு மற்றும் சர்வதேச பாதுகாப்பு விவகாரப் பிரிவில் பணியாற்றிய அவர் அணுசக்தி மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றார்.
பிரதமர் அலுவலகத்தில் கடந்த 2022-ல் உதவி செயலர் பணியில் இணைந்த நிதி திவாரி, 6 ஜனவரி 2023-ல் துணை செயலராக பதவி உயர்வு பெற்றார். 2023-ம் ஆண்டில் ஜி-20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றபோது, வெளியுறவுக் கொள்கையில் அவர் பெற்றிருந்த நிபுணத்துவம் அந்த சமயம் பெரிதும் உதவியாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தனி செயலராக நிதி திவாரியை நியமித்து நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியது. இதைத் தொடர்ந்து அதற்கான உத்தரவை மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை நேற்றைக்கு முந்தைய தினம் (மார்ச் 29) வெளியிட்டுள்ளது.