
இன்று (அக்.08) நடைபெற்று வரும் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், குல்காம் சட்டப்பேரவைத் தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் மொஹமத் யூசுப் தாரிகாமி.
மூன்று கட்டங்களாக நடைபெற்ற ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பிற்பகல் 1.30 மணி நிலவரப்படி இண்டியா கூட்டணியின் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி 41 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 6 இடங்களிலும் முன்னணி வகிக்கின்றன.
மேலும் குல்காம் சட்டப்பேரவைத் தொகுதியில், இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் மொஹமத் யூசுப் தாரிகாமி, சுயேட்சை வேட்பாளர் சயார் அஹமது ரேஷியைவிட சுமார் 5822 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள தாரிகாம் பகுதியில் பிறந்த மொஹமத் யூசுப் தாரிகாமி, கல்லூரியில் படிக்கும்போதே உள்ளூர் அளவில் செயல்பட்டுவந்த கம்யூனிஸ்ட் இயக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
1967-ல் அனந்தநாக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கவும், பிறகு அதே வருடத்தில் காஷ்மீர் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், 1975-ல் இந்திரா ஷேக் உடன்பாட்டுக்கு எதிராகவும், தொடர் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து நடத்தியுள்ளார் தாரிகாமி.
மக்களுக்கு ஆதரவாக பல போராட்டங்கள் நடத்திய தாரிகாமிக்கு உள்ளூர் அளவில் செல்வாக்கு அதிகரித்தது. இதனை அடுத்து முதல் முறையாக 1996-ல் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குல்காம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் தாரிகாமி.
இதைத் தொடர்ந்து 2002, 2008 மற்றும் 2014 ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் குல்காம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார் தாரிகாமி. இந்தத் தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் மீண்டும் குல்காம் தொகுதியில் போட்டியிட்டார் தாரிகாமி.
தற்போது நடைபெற்றுவரும் வாக்கு எண்ணிக்கையில் குல்காம் தொகுதியின் முழுமையான முடிவுகள் தெரிய சில மணிநேரம் ஆகும் எனத் தெரிகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக தற்போது செயல்பட்டு வருகிறார் தாரிகாமி.