மூன்றாவது முறையாகப் பிரதமரான நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் விமானப் போக்குவரத்து அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார் ராம்மோகன் நாயுடு.
தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ஸ்ரீகாகுளம் மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக எம்.பி.யாகத் தேர்வாகியுள்ள 36 வயது ராம் மோகன் நாயுடுதான், தற்போதைய மத்திய அமைச்சரவையின் இளம் அமைச்சர்.
தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திர பாபு நாயுடுவுக்கு நெருங்கிய நபராக அறியப்படும் ராம்மோகன் நாயுடுவின் தந்தை யெர்ரன் நாயுடு, ஸ்ரீகாகுளம் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யாகவும், தேவ கவுடா மற்றும் ஐ.கே.குஜரால் அமைச்சரவையில் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சராகவும் பதவி வகித்தவர்.
2012-ல் சாலை விபத்தில் யெர்ரன் நாயுடு இறந்தபிறகு அரசியலில் அடியெடுத்து வைத்த ராம்மோகன் நாயுடு, 2014 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு 26 வயதில் எம்.பி.யாகப் தேர்வானார். அதன் பிறகு தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராகவும் பதவி வகித்தார்.
2019-ல் இரண்டாவது முறையாக மக்களவைக்குத் தேர்வான ராம்மோகன் நாயுடு தன் செயல்பாடுகளுக்காக 2020-ல் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருதைப் பெற்றார். மாதவிடாய் சுகாதாரம், பாலியல் கல்வி போன்றவற்றின் அவசியம் குறித்து மக்களவையில் உரையாற்றியுள்ள ராம்மோகன் நாயுடு, இந்தியாவின் பிரதிநிதியாக ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றியுள்ளார்.
இளைஞர்கள் அரசியலுக்கு வருவதை ஊக்குவிக்கும் வகையில், `தாக்கத்திற்கான அரசியல்’ என்ற பெயரிலான திட்டத்தைத் தன் தொகுதியில் முன்னெடுத்துள்ள ராம்மோகன் நாயுடு, கடந்த ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ராம் மோகன் நாயுடுவின் சித்தப்பா அட்சன் நாயுடு, தற்போது தெலுங்கு தேசம் கட்சியின் ஆந்திர மாநிலத் தலைவராக உள்ளார்.