
மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்டு தில்லி யூனியன் பிரதேச முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திஹார் சிறையில் உள்ளதை அடுத்து, நாளை சுதந்திர தினத்தன்று தில்லி அரசு சார்பில் யார் தேசியக் கொடியை ஏற்றப்போகிறார் என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.
ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று தில்லி செங்கோட்டையில் பிரதமரும், அந்தந்த மாநிலங்கள், தில்லி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களில் அதன் முதல்வர்களுக்கும் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றுவது வழக்கம்.
ஆனால் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திஹார் சிறையில் உள்ளதால் அவருக்கு பதிலாக சுதந்திர தினத்தன்று யார் தேசியக் கொடியை ஏற்றப்போகிறார் என்ற கேள்வி எழுந்தது. இதை அடுத்து சிறையில் உள்ள கேஜ்ரிவாலை சந்தித்த அமைச்சர் கோபால் ராய், அமைச்சர் அதிஷி மர்லேனாவை கொடியேற்ற கெஜ்ரிவால் அறிவுறுத்தியுள்ளதாக அறிவித்தார்.
மேலும் இது குறித்து தில்லி துணைநிலை ஆளுநருக்குக் கடிதம் எழுதினார் அமைச்சர் கோபால் ராய். இதற்கு பதிலளித்த தில்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா, இந்த விவகாரத்தில் முதல்வர் அரவிந்த கெஜ்ரிவாலிடம் இருந்து தனக்கு எந்த ஒரு அதிகாரபூர்வ கடிதமும் வரவில்லை என்று தெரிவித்தார்.
தேசிய கொடியை அமைச்சர் அதிஷி ஏற்றவேண்டும் என்று துணைநிலை ஆளுநருக்குக் கடிதம் எழுதியிருந்தார் கெஜ்ரிவால். ஆனால் இந்தக் கடிதப் போக்குவரத்து திஹார் சிறை விதிகளின் கீழ் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்படும் சலுகைகளில் வராது என்பதால் அவரது கடிதத்தை துணை நிலை ஆளுநருக்கு அனுப்பவில்லை என்று திஹார் சிறைத்துறை நிர்வாகம் விளக்கமளித்தது.
இதைத் தொடர்ந்து தில்லி அரசின் நிதி, வருவாய் மற்றும் போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கெலாட், சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றுவார் என்று துணைநிலை ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை ஆம் ஆத்மி கட்சி வரவேற்றுள்ளது.