யார் இந்த ரேகா குப்தா?

பனியா வகுப்பிலிருந்து ஒரு பிரதிநிதி, ஆம் ஆத்மியின் வாக்கு வங்கியாக இருக்கும் மகளிர் சார்பாக ஒரு பிரதிநிதி என இரண்டையும் ஒரு புள்ளியில் இணைத்து சரிகட்டும் வகையில்...
யார் இந்த ரேகா குப்தா?
ANI
2 min read

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளது. பாஜக சட்டப்பேரவைக் குழுக் கூட்டம் நேற்று கூடியது. இந்தக் கூட்டத்தில் பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து, துணைநிலை ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

ராம்லீலா மைதானத்தில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில், சுஷ்மா ஸ்வராஜ், ஷீலா தீக்‌ஷித், ஆதிஷி வரிசையில் தில்லியின் நான்காவது பெண் முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆந்திரத் துணை முதல்வர் பவன் கல்யாண், மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் என பல முக்கியப் புள்ளிகள் கலந்துகொண்டார்கள்.

ANI

யார் இந்த ரேகா குப்தா?

ரேகா குப்தாவின் அரசியல் பயணம் 1993-ல் கல்லூரி காலத்திலேயே தொடங்கியது. தௌலத் ராம் கல்லூரியில் ஆர்எஸ்எஸ்-ன் மாணவர் அமைப்பான அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் ரேகா குப்தா இணைந்தார். அடுத்து 1995 முதல் 1996 வரை தில்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க பொதுச்செயலாளராகச் செயல்பட்டார். 1996 முதல் 1997 வரை அதே தில்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத்தின் தலைவரானார் ரேகா குப்தா.

2002-ல் பாஜகவில் இணைந்த ரேகா குப்தா, முதலில் தில்லி பாஜகவின் இளைஞரணிச் செயலாளராகி பிறகு, பாஜக இளைஞரணியின் தேசியச் செயலாளரானார். 2005 வரை அவர் இந்தப் பொறுப்பை வகித்தார். தொடர்ந்து தில்லி பாஜகவின் மகளிரணி பொதுச்செயலாளர், பாஜக மகளிரணியின் தேசிய துணைத் தலைவர், உத்தரப் பிரதேச மகளிர் அணியின் தேசியப் பொறுப்பாளர், பாஜக தேசிய செயற்குழுவின் உறுப்பினர் எனப் பல்வேறு பொறுப்புகளை ரேகா குப்தா வகித்துள்ளார்.

2007-ல் தேர்தல் அரசியலில் களமிறங்கிய ரேகா குப்தா, வடக்கு பிதம்புராவிலிருந்து கவுன்சிலராகத் தேர்வானார். 5 ஆண்டுகளுக்குப் பிறகு, இதே வார்டிலிருந்து மீண்டும் கவுன்சிலராக தேர்வானார் ரேகா குப்தா. தில்லி மாநகராட்சி மூன்றாகப் பிரிக்கப்பட்டிருந்தபோது, தெற்கு தில்லி மாநகராட்சியின் மேயராக இருந்தார். மேலும், தில்லி மாநகராட்சியில், நிதி தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கும் நிலைக் குழுவின் தலைவராகவும் ரேகா குப்தா செயல்பட்டார்.

கல்லூரிக் காலத்திலிருந்து படிப்படியாக வளர்ந்து மேயர் பதவி வரை வந்த ரேகா குப்தா, முதல்முறையாக 2015-ல் சட்டப்பேரவைத் தேர்தலில் ஷாலிமார் பாக் தொகுதியில் போட்டியிட்டார். ஆம் ஆத்மி வேட்பாளர் வந்தனா குமாரியிடம் 10,978 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 2020 சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் வந்தனா குமாரியை எதிர்த்துப் போட்டியிட்டார். மீண்டும் தோல்வி. ஆனால் இம்முறை 3,440 வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியடைந்தார் ரேகா குப்தா.

சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விகளைத் தொடர்ந்து, 2022-ல் மீண்டும் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டார். ஷாலிமார் பாக் வார்டில் போட்டியிட்ட அவர், வெற்றியை ருசித்தார். இந்த வெற்றியைத் தொடர்ந்து, மேயர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டார். இம்முறையும் ரேகா குப்தாவுக்குத் தோல்வியே மிஞ்சியது. ஆம் ஆத்மியின் ஷெல்லி ஓபெராய் மேயராகத் தேர்வானார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் மட்டும் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வந்த ரேகா குப்தாவுக்கு 2025 சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பளித்தது பாஜக. தன்னை இருமுறை வீழ்த்திய வந்தனா குமாரியை மீண்டும் தேர்தல் களத்தில் எதிர்கொண்டார். என் பணி தான் என் அடையாளம் என்ற முழக்கத்துடன் தேர்தலில் போட்டியிட்ட ரேகா குப்தாவின் விடாமுயற்சிக்கு இம்முறை பலன் கிடைத்தது. 29,595 வாக்குகள் வித்தியாசத்தில் வந்தனா குமாரியை வீழ்த்தி தில்லி சட்டப்பேரவைக்கு முதல்முறையாகத் தேர்வானார் ரேகா குப்தா. சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக வெற்றியை ருசித்தவருக்கு முதல்வர் வாய்ப்பு மடியில் வந்து விழுந்துள்ளது.

ANI

தில்லியில் வெற்றியைத் தீர்மானிப்பதில் பெண்கள் முக்கியப் பங்கு வகிப்பார்கள். அதே சமயம், பனியா வகுப்பைச் சேர்ந்தவர்கள் தில்லியில் ஆதிக்கம் செலுத்துவது வழக்கம். பனியா வகுப்பிலிருந்து ஒரு பிரதிநிதி, ஆம் ஆத்மியின் வாக்கு வங்கியாக இருக்கும் மகளிர் சார்பாக ஒரு பிரதிநிதி என இரண்டையும் ஒரு புள்ளியில் இணைத்து சரிகட்டும் வகையில் ரேகா குப்தாவை முதல்வராகத் தேர்வு செய்துள்ளது பாஜக. எதிர்க்கட்சித் தலைவராக ஆதிஷி தேர்வு செய்யப்படலாம் எனக் கூறப்படும் நிலையில், பெண் ஒருவர் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல்வர் வேட்பாளர் என்று எதிர்பார்க்கப்பட்ட பர்வேஷ் வர்மாவுக்குத் துணை முதல்வர் பதவி கிடைத்துள்ளது.

ரேகா குப்தாவுக்கு இரு குழந்தைகள். மகள் ஆஸ்திரேலியாவிலும் மகன் தமிழ்நாட்டிலுள்ள வேலூரில் பொறியியல் கல்லூரியிலும் படித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in