ஆபரேஷன் சிந்தூர் பற்றி அரை மணி நேரம் கழித்தே பாகிஸ்தானுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் தலைமையில் ஆலோசனைக் குழுக் கூட்டம் தில்லியில் இன்று நடைபெற்றது. ஆபரேஷன் சிந்தூர் மற்றும் எல்லைக் கடந்த பயங்கரவாதம் பற்றி ஜெய்ஷங்கர் எடுத்துரைத்தார். ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாகிஸ்தானிடம் முன்பே தகவல் தெரிவிக்கப்பட்டதாக ஜெய்ஷங்கர் கூறியதைச் சுட்டிக்காட்டி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்து வந்தார். இதைக் குற்றம் என ராகுல் காந்தி தெரிவித்தார்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாகிஸ்தானிடம் எப்போது தகவல் தெரிவிக்கப்பட்டது என்ற விவரத்தை ஜெய்ஷங்கர் இந்தக் கூட்டத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். பயங்கரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டு 30 நிமிடங்களுக்குப் பிறகே பாகிஸ்தானுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக ஜெய்ஷங்கர் கூறியுள்ளார். ஆபரேஷன் சிந்தூர் குறித்து வெளியுறவுச் செயலர் அதிகாலை 1.30 மணிக்கு விவரித்தார். இதன்பிறகே, நம் நாட்டின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரலை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தார் என்று இன்றைய கூட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும், பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை மூன்று நாடுகளைத் தவிர வேறு எந்த நாடும் விமர்சிக்கவில்லை என்றும் இன்றைய கூட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
இந்தியா, பாகிஸ்தான் இடையிலான சண்டை நிறுத்தத்துக்கு அமெரிக்கா தான் காரணம் என அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கோரி வருகிறார். இதுவும் மத்திய அரசு மீது விமர்சனமாக இருந்து வருகிறது. போரை நிறுத்தியதில் அமெரிக்காவின் பங்கு என்ன, அமெரிக்காவுக்கு என்ன வேலை என கேள்விகள் முன்வைக்கப்பட்டு வந்தன. ஜெர்மனி நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதையும் தெளிவுபடுத்தியுள்ளார் ஜெய்ஷங்கர்.
இந்தியா, பாகிஸ்தான் இடையிலான சண்டை நிறுத்தத்துக்கு உலக நாடுகள் அமெரிக்காவுக்கு நன்றி தெரிவிக்க வேண்டுமா என்று கேட்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அவர், "இரு நாட்டு ராணுவ கமாண்டர்களும் நேரடியாகத் தொடர்புகொண்டு பேசியபோது, சண்டையை நிறுத்துவதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. அதற்கு முன்பு காலையில், பாகிஸ்தானின் முக்கிய விமானப் படைத் தளங்களையும் வான் பாதுகாப்பு அமைப்புகளையும் நாங்கள் திறம்படத் தாக்கி செயலிழக்கச் செய்தோம். எனவே, சண்டை நிறுத்தத்துக்கு நான் யாருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்? இந்திய ராணுவத்துக்கு தான் நான் நன்றி தெரிவிக்க வேண்டும். காரணம், அவர்களுடைய நடவடிக்கை தான், 'நாங்கள் சண்டையை நிறுத்தத் தயார்' என பாகிஸ்தானைச் சொல்ல வைத்தது" என்றார் ஜெய்ஷங்கர்.