
வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை வரும் ஏப்ரல் 16-ல் நடைபெறவுள்ளது.
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேறியதை அடுத்து, கடந்த ஏப்ரல் 5-ல் வக்ஃபு சட்ட திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கினார். இதைத் தொடர்ந்து, வக்ஃபு திருத்த சட்டம் அமலுக்கு வந்தது.
இந்நிலையில், வக்ஃபு திருத்தச் சட்டம், இஸ்லாமிய சமூக மக்களுக்கு எதிரானதாகவும், அவர்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளதாகவும் குறிப்பிட்டு, சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரால் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
குறிப்பாக, காங்கிரஸ் எம்.பி.க்கள் முஹமத் ஜாவேத், இம்ரான் பிரதாப்கார்ஹி, திமுக எம்.பி. ஆ. ராசா, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமனதுல்லா கான், ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி ஆகியோர் மற்றும் அனைத்து இந்திய இஸ்லாமியர் தனி நபர் சட்ட வாரியம் போன்ற அமைப்புகள் சார்பில், இந்த சட்டத்தை எதிர்த்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கேவியட் மனு தாக்கல் செய்தது.
இந்நிலையில், வரும் ஏப்ரல் 16-ல் உச்ச நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வழக்குகளின் பட்டியலில், வக்ஃபு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது நடைபெறவுள்ள விசாரணை குறித்து இடம்பெற்றுள்ளது.
தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி. விஸ்வநாதன் அமர்வு இவற்றின் மீது விசாரணையை நடத்தவுள்ளது.