
கட்சியில் அமைப்புரீதியாக சில மாநிலங்களில் புதிய தலைவர்கள் தேர்தெடுக்கப்பட்ட பிறகு, நடப்பு மார்ச் மாதத்திலேயே பாஜகவிற்கு புதிய தேசியத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று செய்து வெளியாகியுள்ளது.
பாஜக தேசியத் தலைவராக அமித் ஷா செயல்பட்டபோது, 17 ஜூன் 2019-ல் அக்கட்சியின் செயல் தலைவராக ஜெ.பி. நட்டா நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து, கடந்த ஜனவரி 2020-ல் பாஜகவின் தேசியத் தலைவரானார் நட்டா.
பொதுவாகவே, பாஜக தேசியத் தலைவராக தேர்தெடுக்கப்படும் நபர்கள் மூன்று ஆண்டுகள் மட்டுமே அந்த பொறுப்பில் செயல்படுவார்கள். மேலும், கட்சி விதிகளின்படி ஒரு முறை மட்டும் பதவி நீட்டிப்பு வழங்க முடியும். அந்த வகையில், 2024 மக்களவை தேர்தலைக் கருத்தில்கொண்டு நட்டாவுக்கு 2023-ல் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
2024 மக்களவை தேர்தலுக்குப் பிறகு கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் மீண்டும் பாஜக அரசு அமைந்தபிறகு, மத்திய சுகாதார அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார் நட்டா. கட்சி விதிகளின்படி, மத்திய அமைச்சராக பொறுப்பு வகிக்கும் நபர் தேசியத் தலைவராக பொறுப்பு வகிக்க இடமில்லை.
இதனால் விரைவில் புதிய தேசியத் தலைவர் தேர்தெடுக்கப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால், மத்திய அமைச்சராக நட்டா பொறுப்பேற்று 9 மாதங்கள் கடந்தும் இதுவரை புதிய தேசியத் தலைவர் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில், நடப்பு மார்ச் மாதத்தில் பாஜகவில் புதிய தேசியத் தலைவர் நியமிக்கப்படவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
கட்சி விதிகளின்படி குறைந்தபட்சம் 50 சதவீத மாநிலங்களில் புதிய தலைவர்கள் தேர்தெடுக்கப்பட்ட பிறகே, தேசியத் தலைவரை தேர்தெடுக்க முடியும். அந்த வகையில் அமைப்புரீதியாக கட்சியின் 36 மாநிலங்களில், 12 மாநிலங்களில் உட்கட்சித் தேர்தல்கள் முடிந்து, புதிய தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
அடுத்த 10 நாட்களுக்குள் பீஹார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், கர்நாடகம், ஹரியாணா மாநிலங்களில் உட்கட்சித் தேர்தல்கள் நிறைவுபெறும். அதன்பிறகு புதிய தேசியத் தலைவர் தேர்தெடுக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.