60-70 நாள்கள் நாடாளுமன்றத்துக்கு வந்தால் மட்டும் போதும் என்றார்கள், ஆனால்...: பாஜக எம்.பி. கங்கனா ரணாவத்

"மற்ற நேரங்களில் உங்களுடைய வேலைகளைப் பார்க்கலாம் என்று தான் கூறினார்கள்."
60-70 நாள்கள் நாடாளுமன்றத்துக்கு வந்தால் மட்டும் போதும் என்றார்கள், ஆனால்...: பாஜக எம்.பி. கங்கனா ரணாவத்
ANI
1 min read

நாடாளுமன்ற உறுப்பினரான பிறகு, 60-70 நாள்கள் நாடாளுமன்றத்துக்கு வந்தால் போதும், மற்ற நேரங்களில் தங்களுடைய வேலைகளைப் பார்க்கலாம் என்று தன்னிடம் கூறப்பட்டதாக பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் (Kangana Ranaut) தெரிவித்துள்ளார்.

நடிகை கங்கனா ரணாவத் கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நாடாளுமன்ற உறுப்பினர் ஆன பிறகு, கங்கனா ரணாவத் நடிப்பில் பாலிவுட்டில் ஒரு படம் (எமெர்ஜென்சி) மட்டுமே வெளியாகியுள்ளது.

அண்மையில் ஆல் இந்தியா ரேடியோவுக்கு பேட்டியளித்த கங்கனா ரணாவத், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் தனக்குப் பெரிய சந்தோஷம் கிடைப்பதில்லை என்று கூறியது பேசுபொருளானது. இந்நிலையில், தற்போது 60-70 நாள்கள் நாடாளுமன்றத்துக்கு வந்தால் போது, மற்ற நேரங்களில் சொந்த வேலைகளைப் பார்க்கலாம் என்று தன்னிடம் சொல்லப்பட்டதாக கங்கனா ரணாவத் பேசியிருப்பது கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.

டைம்ஸ் நௌ குரூப் தலைமை ஆசிரியர் நவிகா குமாருக்கு அளித்த நேர்காணலில் நடிகையும் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரணாவத் கூறியதாவது:

"நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்கும் ஆண்டில், பல நாடாளுமன்ற கூட்டத்தொடர்கள் நடக்கும். இரு பட்ஜெட் கூட்டத்தொடர்கள் நடக்கும். ஒரு கூட்டத்தொடர் முடிந்தால், அடுத்த கூட்டத்தொடர் நடக்கும். நாம் எவ்வளவு நேரத்தை இழந்தாலும் அவை அனைத்தும் ஒரே சமயத்தில் தான் இழக்க நேரிடும். இந்தப் பணியில் நாம் நிறைய நேரத்தை செலவழிக்க வேண்டிய தேவையிருக்காது என்று தான் எதிர்பார்த்தேன்.

என்னிடம் எம்.பி. பதவி வழங்கப்படுவதற்கு முன், சுமார் 60-70 நாள்களுக்கு நாடாளுமன்ற கூட்டத்தொடர்களில் பங்கெடுக்க வேண்டும், மற்ற நேரங்களில் உங்களுடைய வேலைகளைப் பார்க்கலாம் என்று தான் கூறினார்கள். எனக்கு இது நியாயமானதாகவே பட்டது. ஆனால், இந்தப் பணிக்கு நிறைய நேரத்தை செலவிட வேண்டியிருக்கிறது" என்றார் கங்கனா ரணாவத்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in