

தேர்தல் சீர்திருத்தம் தொடர்புடைய விவாதத்தில் காங்கிரஸ் கட்சியை அமித் ஷா கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், அவர் பதற்றமாக இருந்ததாக ராகுல் காந்தி பதிலடி தந்துள்ளார்.
மக்களவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அமித் ஷாவின் கைகள் நடுங்கியதாகவும் குறிப்பிட்டார்.
ராகுல் காந்தி கூறியதாவது:
"அமித் ஷா நேற்று மிகவும் பதற்றமாக இருந்தார். தவறான மொழியைப் பயன்படுத்தினார். அவருடைய கைகள் நடுங்கின. அவர் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளார். எல்லோரும் அதை நேற்று பார்த்திருப்பீர்கள். நான் கேட்டதற்கு அவர் நேரடியாகப் பதிலளிக்கவில்லை. ஆதாரங்களைக் கொடுக்கவில்லை. என்னுடைய எல்லா செய்தியாளர்கள் சந்திப்புகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கலாம் என்று சவால் விடுத்தேன். அதற்கு எந்த நேரடி பதிலும் எனக்குக் கிடைக்கவில்லை" என்றார் ராகுல் காந்தி.
ராகுல் காந்தியை விமர்சித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசினார். அவர் கூறுகையில், "இடித்துவிட்டு நிற்காமல் ஓடும் உத்தியை ராகுல் காந்தி பின்பற்றுகிறார். பிரதமரும் உள்துறை அமைச்சரும் பேசும்போது வெளியேறிவிடுகிறார். இதுதான் அவருடைய ஜனநாயகம். உண்மையைக் கேட்கும் துணிச்சல் அவருக்கு இல்லை. மத்திய உள்துறை அமைச்சர் நேற்று பேசியதைக் கேட்டு அவர் வருந்தினார். இந்தப் பழக்கத்தை ராகுல் காந்தி கைவிட வேண்டும். உள்துறை அமைச்சரின் பேச்சுக்குப் பிறகு ஒட்டுமொத்த நேரு குடும்பமும் குழம்பிப் போய் உள்ளது.
நாடாளுமன்றத்தில் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் குறித்து ராகுல் காந்தி மற்றும் அமித் ஷா இடையே புதன்கிழமை விவாதம் வெடித்தது. செய்தியாளர் சந்திப்புகளில் தான் எழுப்பிய விவகாரங்கள் பற்றி பேச அமித் ஷாவுக்குத் தொடர்ச்சியாக சவால் விடுத்து வந்தார் ராகுல் காந்தி. உங்களுடைய விருப்பப்படி நாடாளுமன்றம் இயங்காது என அமித் ஷா உறுதிபடத் தெரிவித்தார். மேலும், சிறப்பு தீவிர திருத்தமானது வாக்காளர் பட்டியலைச் சரிப்படுத்தும் அத்தியாவசிய நடைமுறை என்றும் அமித் ஷா ஆதரவாகப் பேசினார். தேர்தலில் வெற்றி பெற்றால் தேர்தல் ஆணையத்தைப் புகழ்வது மற்றும் தோல்வியடைந்தால், விமர்சிப்பது என எதிர்க்கட்சி இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும் அமித் ஷா கூறினார்.
அமித் ஷா உரையின்போது, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தார்கள். இதன்பிறகு, மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
Lok Sabha LoP Rahul Gandhi continued his attck on Home Minister Amit Shah after the later lambasted the Congress party in his speech during the election reform debate in the Lok Sabha.
Rahul Gandhi | Amit Shah | Lok Sabha |