டிரம்ப் அறிவிப்பால் புனேவில் அதிகரித்த இறால் விற்பனை: பின்னணி என்ன?

வரி விதிப்பை 90 நாட்களுக்குத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்திருந்தாலும், கடல் உணவுப் பொருட்களின் ஏற்றுமதி ஏற்கனவே பாதிப்பை சந்தித்துள்ளது.
டிரம்ப் அறிவிப்பால் புனேவில் அதிகரித்த இறால் விற்பனை: பின்னணி என்ன?
ANI
1 min read

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிமுகப்படுத்திய பரஸ்பர வரி விதிப்பு நடைமுறையால், மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் இறால் விற்பனை அதிகரித்துள்ளதாக சுவாரஸ்யமான செய்தி வெளியாகியுள்ளது.

பரஸ்பர வரி விதிப்பு நடைமுறையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிமுகப்படுத்தியதை அடுத்து, பல்வேறு உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் அந்தந்த நாடுகளிலேயே தேக்கத்தை சந்தித்துள்ளன. அந்த வகையில் தேக்கமடைந்த முக்கியமான பொருட்களில் இந்திய இறால்களும் அடக்கம்.

இந்திய இறால்களுக்கான மிகப்பெரிய சந்தையாக அமெரிக்கா திகழ்கிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் சுமார் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்பீட்டில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறால்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்நிலையில், டொனால்ட் டிரம்பின் பரஸ்பர வரி நடைமுறை அறிவிப்பால் இறால் ஏற்றுமதி வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இதற்கு முன்பு, இந்திய இறால்கள் மீது 8% இறக்குமதி வரியை அமெரிக்கா விதித்துவந்தது. பரஸ்பர வரி விதிப்பு நடைமுறைக்குப் பிறகு, இறால்கள் மீது கூடுதலாக 27% இறக்குமதி வரி அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு ஈடுசெய்வரி (countervailing duty) போன்ற மேலும் சில வரிகள் விதிக்கப்படும் பட்சத்தில், இது 45% ஆக உயரும் வாய்ப்பு உருவானது.

இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு மேற்கொள்ளப்படும் இறால்கள் ஏற்றுமதி தேக்க நிலையை சந்தித்துள்ளது. அதேநேரம், ஏற்றுமதி குறைந்ததால் புனே பகுதியில் 20% மேல் இறால்களின் விலை வீழ்ச்சியை சந்தித்து, இறால் விற்பனை அதிகரித்துள்ளது.

சீனா தவிர்த்து, பிற நாடுகள் மீதான இந்த பரஸ்பர வரி விதிப்பு நடைமுறையை 90 நாட்களுக்குத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்திருந்தாலும், அமெரிக்காவிற்கான இந்திய கடல் உணவுப் பொருட்களின் ஏற்றுமதி ஏற்கனவே பாதிப்பைக் கண்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in