ஜம்மு - காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவதில் என்ன பிரச்னை?: சுப்ரியா சுலே

ஜம்மு - காஷ்மீர் பட்ஜெட் மக்களவையில் தாக்கல் செய்யப்படுவது வேதனை அளிக்கிறது
ஜம்மு - காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவதில் என்ன பிரச்னை?: சுப்ரியா சுலே
ANI
1 min read

நேற்று (ஜூலை 27) மக்களவையில் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மத்திய பட்ஜெட் உரையை வாசித்து முடித்ததைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச பட்ஜெட்டையும் அவர் மக்களவையில் தாக்கல் செய்தார்.

நாடாளுமன்றத்தால் 2019-ல் இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. இதன் மூலம் அன்றைய ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு இருந்த சிறப்பு அந்தஸ்து முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து ஜம்மு – காஷ்மீர் மாநில மறுசீரமைப்பு சட்டம் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. இதனால் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் இருந்து, லடாக் யூனியன் பிரதேசமும், ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசமும் புதிதாக உருவாகின.

ஆனால் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெறாததால், அம்மாநில பட்ஜெட்டை 2020-ல் இருந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து மத்திய அரசு. நேற்று ஐந்தாவது முறையாக ஜம்மு - காஷ்மீர் பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்.

ஜம்மு - காஷ்மீர் பட்ஜெட் மூலம் அம்மாநிலத்துக்கு ரூ. 1,18,390 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் மத்திய பட்ஜெட் மூலம் ஜம்மு – காஷ்மீருக்கு ரூ. 42,278 கோடியும், ஜம்மு காஷ்மீர் காவல்துறைக்கு ரூ. 9,789 கோடியும் ஒதுக்கப்பட்டது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இது 1.2 % அதிகமாகும்.

ஜம்மு – காஷ்மீர் பட்ஜெட் தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே, `ஜம்மு - காஷ்மீரை பிரிக்கும் போது ஓராண்டில் அங்கு தேர்தல் நடத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அப்போது அறிவித்தார். ஆனால், தற்போது ஜம்மு - காஷ்மீர் பட்ஜெட் மக்களவையில் தாக்கல் செய்யப்படுவது வேதனை அளிக்கிறது.

ஜம்மு - காஷ்மீர் பட்ஜெட், அந்த யூனியன் பிரதேச சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட வேண்டும். ஜம்மு - காஷ்மீரில் நாடாளுமன்ற தேர்தலை நடத்தும் போது, சட்டப்பேரவை தேர்தலை நடத்துவதில் என்ன பிரச்னை?’ என்றார்.

கடைசியாக 2014-ல் ஜம்மு - காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடந்தது. அதைத் தொடர்ந்து இந்த வருடம் ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெறும் வாய்ப்பு உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in