
வக்ஃப் சொத்துக்கான பதிவு மத்திய போர்டல் மற்றும் தரவுத்தளம் மூலம் செய்யப்பட வேண்டும். மக்களவையில் நேற்று (ஏப்ரல் 2) தாக்கல் செய்யப்பட்ட வக்ஃபு சட்ட திருத்த மசோதா ஏறத்தாழ 12 மணி நேர விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது. இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, அது தொடர்பான விவாதம் நடைபெற்றது.
வக்ஃபு என்றால் என்ன?
இஸ்லாமியர்களின் நலன்களுக்காகவும், மதம் சார்ந்த மற்றும் தொண்டு சார் நோக்கங்களுக்காகவும் இஸ்லாமியர்களால் தானமாக அளிக்கப்படும் அசையும் மற்றும் அசையாத சொத்துகள் வக்ஃபு என்று அழைக்கப்படும்.
முன்பு மன்னராட்சி நடைபெற்ற காலத்தில் மக்கள் வரிப்பணத்தில் இருந்து கோயில்கள் கட்டப்பட்டன. நாட்டின் சுதந்திரத்திற்குப் பிறகு, மாநில அரசுகள் வசம் உள்ள அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கோயில்கள் சென்றன. அதேபோல இஸ்லாமியர்களால் தானம் அளிக்கப்பட்ட வக்ஃபு சொத்துகளை நிர்வகிக்க, 1954-ல் வக்ஃபு சட்டம் இயற்றப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, அனைத்து மாநிலங்களிலும் வக்ஃபு வாரியங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதன்பிறகு மாநில வாரியங்களைக் கண்காணிக்க தேசிய அளவில் மத்திய வக்ஃபு கவுன்சில் உருவாக்கப்பட்டது. 1954-ம் ஆண்டு சட்டத்திற்கு மாற்றாக 1995-ல் விரிவாக்கம் செய்யப்பட்டது.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா 2024
இந்நிலையில், வக்ஃபு வாரியங்களின் செயல்திறனை மேம்படுத்தவும், அது சார்ந்த பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும், கடந்தாண்டு ஆகஸ்டில் வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.
கூட்டுக்குழுவில் உறுப்பினர்களாக இருந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சட்ட திருத்த மசோதாவில் மேற்கொள்ளவேண்டிய 44 திருத்தங்களை முன்மொழிந்தார்கள். ஆனால் பெரும்பான்மை அடிப்படையில், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முன்மொழிந்த திருத்தங்கள் அனைத்துமே நிராகரிக்கப்பட்டன.
அதேநேரம், ஆளும் கூட்டணி எம்.பி.க்களால் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. கூட்டுக்குழுவின் அறிக்கை நடப்பாண்டு பிப்ரவரியில் சமர்ப்பிக்கப்பட்டது.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா 2025
நாடாளுமன்ற கூட்டுக்குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், புதிய வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் நேற்று நண்பகல் 12 மணி அளவில் தாக்கல் செய்தார். இதன் அடிப்படையில் மக்களவையில் விவாதங்கள் நடைபெற்றன.
மசோதாவில் இடம்பெற்ற முக்கிய திருத்தங்கள்:
1) குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் இஸ்லாமியத்தைப் பின்பற்றும் எந்த ஒரு நபரும் வக்ஃபுவுக்குத் தனது சொத்தை நன்கொடையாக அளிக்கலாம் என்ற புதிய ஷரத்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2) மத்திய வக்ஃபு கவுன்சிலிலும், மாநில வக்ஃபு வாரியங்களிலும், இஸ்லாமியர் அல்லாத இருவர் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்று சட்ட திருத்தம் குறிப்பிடுகிறது.
அதேநேரம், வக்ஃபு சொத்துகளை நிர்வகிக்கும் பொறுப்பு முத்தாவாலிக்கள் (Mutawalli) வசமே இருக்கும் என்றும், இஸ்லாமியர் அல்லாதோரை வாரியங்களில் சேர்த்ததற்கான காரணம், வக்ஃபு சொத்துகள் அவை உரிய நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யப்படுவதற்காகவே என்றும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
3) ஒரு சொத்து வக்ஃபு வாரியத்தின் கீழே வருவதை முடிவு செய்யும் வக்ஃபு வாரியத்தின் அதிகாரம், சட்ட திருத்த மசோதா மூலம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
மேலும், தற்போது வக்ஃபு தீர்ப்பாயத்தில் இரண்டு உறுப்பினர்கள் உள்ளார்கள். புதிய சட்ட திருத்தத்தின்படி தீர்ப்பாய உறுப்பினர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மாவட்ட நீதிபதி, இணை செயலர் அந்தஸ்தில் உள்ள அரசு அதிகாரி மற்றும் இஸ்லாமிய சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர், என மூன்று பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள்.
அத்துடன், தீர்ப்பாயத்தின் உத்தரவுகளை எதிர்த்து 90 நாட்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய சட்ட திருத்தம் வழிவகை செய்கிறது.
4) பழைய சட்ட திருத்த மசோதாவில், வக்ஃபு நிலங்களை அளவீடு செய்வதற்கான அதிகாரம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டன.
புதிய சட்ட திருத்த மசோதாவின்படி, மாவட்ட ஆட்சியரைவிட அதிக அந்தஸ்தில் உள்ள மூத்த அதிகாரி வசம் வக்ஃபு நிலங்களை அளவீடு செய்வதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
5) போஹ்ரா (Boharas) மற்றும் அகாகானிஸ் (Aghakhanis) ஆகிய இஸ்லாமிய பிரிவினருக்குத் தனி சொத்து வாரியத்தை உருவாக்க சட்ட திருத்த மசோதா வழிவகை செய்கிறது.
6) சட்ட திருத்த மசோதா அமலுக்கு வந்த 6 மாத காலத்திற்குள் வக்ஃபு சொத்துகள் தொடர்பான விவரங்களை அதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்படவுள்ள மையப்படுத்தப்பட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவேண்டும்.
புதிதாகப் பதிவு செய்யப்படவுள்ள வக்ஃபு சொத்துக்கள் அனைத்தையும் இந்த இணையதளம் வாயிலாகவே இனி சமர்ப்பிக்க முடியும்.