தொடர் சரிவில் வைரங்களின் விலை: பின்னணி என்ன?

2008-ம் ஆண்டில் ஏற்பட்ட உலக பொருளாதார மந்த நிலைக்குப்பின் இவ்வளவு மதிப்புடைய வைரங்கள் தேங்கியுள்ளது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.
தொடர் சரிவில் வைரங்களின் விலை: பின்னணி என்ன?
1 min read

பூமிக்கு அடியில் பல கிலோமீட்டர்கள் ஆழத்தில், பல லட்சம் ஆண்டுகள் வரை வெப்பத்தையும் அழுத்தத்தையும் தாங்கிய கார்பன் துண்டுகள்தான், பட்டை தீட்டப்பட்டு, வைரமாகி, வைர நகைகளாக ஜொலிக்கின்றன. தங்கம், வெள்ளியை அடுத்து உலக சந்தையில் வைரமும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

வைர வியாபாரத்தில் உலகளவில் அமெரிக்கா முதலிடத்திலும் அடுத்த இடத்தில் சீனாவும் இந்தியா 3-வது இடத்திலும் உள்ளன. ஷோரூம்களில் தங்கம், வெள்ளி மட்டுமல்லாமல் வைரமும் விற்பனைக்கு உள்ளன. வைர நகை அணிவதை பெருமையாகவும் அந்தஸ்து மிக்கதாகவும் நம் ஊரில் கருதுவதால் வைர வியாபாரத்தில் உலக அளவில் 6 சதவீதம் வரை வைரங்களை இந்தியா விற்பனை செய்து வருகிறது.

இந்தியாவில் தற்போது ஒரு கேரட் வைரத்தின் விலை சராசரியாக ரூ. 3 லட்சத்து 50 ஆயிரமாக உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் தங்கத்தின் விலை சுமார் 60 சதவீதமும், வெள்ளியின் விலை சுமார் 76 சதவீதமும் உயர்ந்துள்ள நிலையில் இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் ஒரு காரட் வைரத்தின் விலை மட்டும் சுமார் 30 சதவீதம் வரை சரிவை சந்தித்துள்ளது.

இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் வைரத்தின் விலை தொடர் சரிவை சந்திந்து வருகிறது. உலகின் முக்கிய வைர சந்தையான அமெரிக்காவில் வைரங்களின் விலை 26 சதவீதம் வரை குறைந்துள்ளது.

உலகளவிய வைர வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் முன்னணி நிறுவனமான டி பீர்ஸில், கடந்தாண்டு இறுதியில் சுமார் ரூ. 16 ஆயிரம் கோடி மதிப்பிலான வைரங்கள் தேங்கியுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. 2008-ம் ஆண்டில் ஏற்பட்ட உலக பொருளாதார மந்த நிலைக்குப்பின் இவ்வளவு மதிப்புடைய வைரங்கள் தேங்கியுள்ளது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. மேலும், விற்பனை மந்தமாக உள்ள காரணத்தால், வைர உற்பத்தியும் வெகுவாக குறைத்துள்ளது.

அதேநேரம், குறைந்த எடையில் சென்ட் கணக்கில் விற்கப்படும் வைரங்களின் விலை அதிகரித்து வருவதாகவும், 1 முதல் 5 சென்ட் வரையிலான சிறிய வைர கற்களை மக்கள் விரும்பி வாங்குவதாகவும் கூறப்படுகிறது. கேரட் அளவிலான வைர கற்களின் அதிக விலையால் பொதுமக்களுக்கு அவற்றின் மீதான ஆர்வம் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

மற்றொரு காரணமாக, ஆய்வுகங்களில் உருவாகும் செயற்கை வைரங்களாலும் இயற்கை வைரங்களின் விலை சரிந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால் இயற்கையாக உருவாகும் வைரங்களை ஒப்பிடும்போது, செயற்கையாக உருவாக்கப்படும் வைரங்களின் விலை குறைவாகும்.

அதேநேரம் உற்பத்தி பெருகிய காரணத்தால் 2020-ம் ஆண்டை ஒப்பிடும்போது செயற்கை வைரங்களின் விலை 74 சதவீதம் வரை குறைந்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in