
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் பழங்குடிகளுக்காக புதிதாக உருவாக்கப்பட்ட 9 தனித்தொகுதிகளின் முன்னணி நிலவரம் கவனம் பெற்றுள்ளன.
இன்று (அக்.08) காலை 8 மணிக்குத் தொடங்கி 90 இடங்களுக்கான ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 46 இடங்கள் தேவை என்ற நிலையில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி இண்டியா கூட்டணியின் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி 43 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 7 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
கடந்த 2019-ல் அன்றைய ஜம்மு காஷ்மீர் மாநிலம், சட்டப்பேரவையுடன் கூடிய ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் சட்டப்பேரவை இல்லாத லடாக் யூனியன் பிரதேசம் என இரண்டாக பிரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, முன்பு மாநிலமாக இருந்தபோது 87 இடங்கள் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் இருந்தன. மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 90 இடங்கள் உருவாகின. மேலும் முதல்முறையாக 9 இடங்கள் பழங்குடிகளுக்காக ஒதுக்கப்பட்டு தனித்தொகுதிகளாக அறிவிக்கப்பட்டன.
தற்போது நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில், பழங்குடிகளுக்கு ஒதுக்கப்பட்ட 9 இடங்களில், 6 இடங்களில் தேசிய மாநாட்டுக் கட்சியும், 1 இடத்தில் காங்கிரஸ் கட்சியும், 2 இடங்களில் சுயேட்சைகளும் முன்னிலை வகித்து வருகின்றன.