
மஹாராஷ்டிர சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர சபாநாயகர் அலுவலக அதிகாரிக்குப் பணம் வழங்க ஆளும் கூட்டணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தயாராக இருந்தது குறித்த செய்தி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர சபாநாயகர் அலுவலக அதிகாரி ஒருவரை ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் அணுகியதாகவும், இதற்காக அவருக்குப் பணம் தரவும்கூட அவர்கள் முன்வந்ததாகவும் கடந்த வாரம் மராட்டிய செய்தித்தாள் ஒன்றில் செய்தி வெளியானது.
இந்த விவகாரம் தொடர்பாக, சிவசேனா (உத்தவ்) எம்.எல்.ஏ. பாஸ்கர் ஜாதவ் அம்மாநில சட்டப்பேரவையில் பேசினார். இதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் தன் மீது எந்த தவறும் இல்லை என்றும், இதை சட்டப்பேரவையில் எழுப்புவதற்கு முன்பு முதலில் தன்னுடைய கவனத்திற்குக் கொண்டுவந்திருக்கவேண்டும் என்றும் சபாநாயகர் ராகுல் நர்வேகர் கருத்து தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, இது போன்ற தீர்மானங்களைக் கொண்டு வருவது அதிகரித்து வருவதால் தங்கள் பிரச்னைகள் ஓரங்கட்டப்படுவதாக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சுட்டிக்காட்டினார்கள்.
கவன ஈர்ப்புத் தீர்மானம் என்றால் என்ன?
கவன ஈர்ப்புத் தீர்மானத்தை உபயோகித்து, பொது முக்கியத்துவம் வாய்ந்த அவசரப் பிரச்னை குறித்த ஆளும் அரசின் கவனத்தை சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் ஈர்க்கலாம். இதன் மூலம், சம்மந்தப்பட்ட பிரச்னை குறித்த உரிய விளக்கத்தை அரசிடம் இருந்து பெற முடியும். பல்வேறு விவகாரங்களுக்காக இந்தத் தீர்மானம் பயன்படுத்தப்படுகிறது.
உரிய விளக்கத்தைப் பெற விரும்பும் விவகாரம் தொடர்பாக சபாநாயகர் ஒப்புதலுடன், எம்.எல்.ஏ.க்கள் கவன ஈர்ப்புத் தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டு வரலாம். இதன் மூலம் அமைச்சர்கள் அளிக்கும் விளக்கங்களை முன்வைத்து சட்டப்பேரவையில் விவாதத்தில் ஈடுபட முடியாது.
மும்பையில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள வங்கதேசத்தினர், நில ஆக்கிரமிப்பு, குடிசை மறுவாழ்வு திட்டத்தில் சாதிச் சான்றிதழ்கள் வழங்குவதற்கான வழிமுறைகள் இல்லாதது எனப் பல்வேறு விவகாரங்களில் அரசிடம் இருந்து விளக்கத்தைப் பெற நடப்பு பட்ஜெட் தொடரில் கவன ஈர்ப்புத் தீர்மானம் பயன்படுத்தப்பட்டது.